மும்பையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ட்ரோன்கள், பாராகிளைடர்கள் பறக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை காவல் துறை உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது: மும்பையில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவும் பொது சொத்துகளை சேதப்படுத்தவும் மும்பை காவல் ஆணையரக எல்லைக்குள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ட்ரோன்கள் மற்றும் பாராகிளைடர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரையில் அமலில் இருக்கும்.
இதன்படி, ட்ரோன்கள், ரிமோட்டில் இயங்கும் சிறியரக விமானம், பாராகிளைடர்கள் மற்றும் ஹாட் ஏர் பலூன்கள் பறக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.