ஆதாரங்கள் இல்லாமல் மனு தாக்கல்; மதுரையை சேர்ந்தவருக்கு 2 ஆண்டு பொதுநல வழக்கு தொடர தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை  சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளார். பல்வேறு முக்கிய உத்தரவுகளையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் பெற முடியாத வகையில்  சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு உள்ள அனைத்து அதிகாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் முடக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்திருந்தார்.  இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்  பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு  வந்தது.

அப்போது, மனுதாரர் கே.கே.ரமேஷிடம் நீங்கள் எங்காவது பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மனுதாரர், பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா விஷயங்களுக்கும் லஞ்சம் என்று உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் வாங்க கூடாது என்று அறிவுறுத்தும் வகையில் அறிவிப்புகளை வைக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றுதான் கோருகிறேன் என்றார். அதற்கு நீதிபதிகள், எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பொதுநல வழக்கு  தொடர முடியாது. வழக்கை வாபஸ் பெறுங்கள்.

இல்லையென்றால் அபராதத்துடன் பொதுநல வழக்கு தொடர தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். அதற்கு மனுதாரர், எனது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரினார். இதை  ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் விளம்பரத்திற்காகவே இந்த வழக்கை  தொடர்ந்துள்ளார். எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாமல் பொதுவான கோரிக்கையை வைத்துள்ளார். எனவே, மனுதார் கே.கே.ரமேசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை 15 நாட்களுக்குள் சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம்  தரவேண்டும். மேலும், மனுதாரர் 2 ஆண்டுகளுக்கு பொதுநல வழக்கு தொடர தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.