இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும், விரும்பும் பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை புதுப்பொலிவோடு மேம்படுத்தவும், கோயில்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், கோயில் ஆணையர்களுடன் சென்னையில் இன்று (ஜூன் 12) ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழில் அர்ச்சனை செய்வதற்குண்டான பயிற்சியை அனைத்து அர்ச்சகர்களுக்கும் தந்திருக்கின்றனர். திருக்கோயில்களில் ஏற்கெனவே தமிழில் அர்ச்சனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்போது அனைத்து திருக்கோயில்களிலும் குறிப்பாக, முக்கியமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகையை கோயில்களில் வைக்கவுள்ளோம். தமிழில் அர்ச்சனை செய்யவுள்ள அர்ச்சகர்களின் பெயர்கள், கைபேசி எண்களும் அதில் இடம்பெறும்.

பெண்கள் அர்ச்சகர் பயிற்சி எடுக்க விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து அர்ச்சகராக்குவதற்கு உண்டான முயற்சியை முதல்வர் அனுமதியுடன் மேற்கொள்வோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பயிற்சி தந்து அர்ச்சகர் பணியில் ஈடுபடுத்த முடிவு எடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.