மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், சில கட்சிகளின் கூட்டணி முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. ஆனால், பல மாதங்களுக்கு முன்பே, ‘திமுகவுடன் இணைந்து பயணிப்போம்’ என அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துவிட்டன. இருந்தும் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டும் இழுபறியாக உள்ளது. குறிப்பாக, பெரும்பாலான கட்சிகள் திமுக வழங்க முன்வரும் தொகுதிகளைவிட அதிகமான தொகுதிகளைத்தான் கேட்கின்றன.

திமுக கூட்டணியில் இதுவரை சிபிஎம், சிபிஐ, கொங்கு தேசிய மக்கள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே சுமுகமாகப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. அதிலும், குறிப்பாக சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தத் தொகுதியில் அவர்கள் போட்டி என்பது உறுதி செய்யாமல் இருக்கிறது. ஐயுஎம்எல் கட்சிகள் ராமநாதபுரத்திலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கலில் போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த இழுபறி? – ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு காரணத்தை முன்வைத்து அதிக தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற முனைப்பு காட்டுகிறது. குறிப்பாக, காங்கிரஸுக்கு தமிழகத்தில் 6 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்த நிலையில், இண்டியா கூட்டணியைத் தலைமை தாங்கும் கட்சி என்ற நிலையிலும், புதிதாக தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் செல்வப்பெருந்தகை தன் அளுமையை நிரூபிக்க, அதிக தொகுதிகள் பெற தீவிரம் காட்டி வருகிறார். இதனால் கிட்டத்தட்ட 13 தொகுதி வரை திமுகவிடம் கேட்கிறது காங்கிரஸ்.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தும் இந்த நேரத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதில், விசிக முன்வைக்கும் தொகுதிகளுக்கு குறைவாக திமுக ஒதுக்க விரும்பினால், தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சித் தலைவர் திருமாவளவனும், ”3 தனித் தொகுதிகள் , 1 பொதுத் தொகுதியைக் கோரினோம். ஆனால், அதற்கு திமுக சம்மந்திக்கவில்லை. இதனால், 3 தொகுதிகளை ஒதுக்கக் கோரிக்கை வைத்துள்ளோம். நாங்கள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையிலிருந்து பின்வாங்கப்போவதில்லை” என்பதைத் திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார்.

அதேபோல், மதிமுகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்னும் தன்மையை இழந்து 2006-ம் ஆண்டிலிருந்து பயணித்து வருகிறது. இம்முறை இரண்டு மக்களவைத் தொகுதிகளைப் பெற்று தனித்த சின்னம் குறிப்பாக தன் கட்சியின் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்தில் நின்று வாக்கு வங்கியை உயர்த்தியே ஆகவேண்டும் என்னும் முடிவில் இருக்கிறது. இதனால், அவர்களும் இரண்டு தொகுதிகளைக் கேட்டு முரண்டு பிடித்து வருகின்றனர். ஆனால், திமுக ஒரு தொகுதியை ஒதுக்க முடிவெடுத்துள்ளது.

 

 

இது தவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கடந்த முறை பெரும்பாலான நகரப் பகுதிகளில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பதைச் சுட்டிக்காட்டி இரண்டு தொகுதிகளை ஒதுக்கக் கோரிக்கை வைக்கிறது. மேலும், சொந்த சின்னத்தில் நிற்கவும் திட்டமிடுகிறது. ஆனால், திமுக ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது.

இப்படி கடந்த மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் கூடுதல் தொகுதியைக் கேட்கின்றனர். இதில், புதிதாக திமுகவுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டப்பேரவையில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தலா ஒரு மக்களவைத் தொகுதியை ஒதுக்க திமுகவிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன.

 

 

திமுக சென்றமுறையைவிட இம்முறை கூடுதல் தொகுதிகள், குறிப்பாக 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டது. ஆனால், திமுக கணக்கை மொத்தமாக தவிடுபொடியாக்கி, கூட்டணி கட்சிகள் வேறு ஒரு ரூட்டைப் பிடித்திருப்பதால் திமுகவுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் சொல்லும் சொல்லும் கணக்குப்படி தொகுதிப் பங்கீட்டைத் திமுக முடித்தால், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே திமுகவால் போட்டியிட முடியும். இதற்குத் தீர்வுக் கண்டு, கூட்டணி கட்சிகளைத் திமுக எப்படி சரிகட்டும் என்பதைப் பொறுந்திருந்து பார்க்கலாம்.