2024 மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். முன்னதாக அந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. பாமக வேட்பாளர் பட்டியல்:
- திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
- அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
- ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்
- கடலூர் – தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்
- தருமபுரி – சவுமியா அன்புமணி
- சேலம் – ந. அண்ணாதுரை
- விழுப்புரம் – முரளி சங்கர்