பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், பாமக சார்பாகப் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அன்புமணி போட்டியிடவில்லை. அதன காரணம் என்ன?
- பாமக வேட்பாளர் பட்டியலின் விவரம்:
- திண்டுக்கல் – திலகபாமா
- அரக்கோணம் – பாலு
- ஆரணி – கணேஷ்குமார்
- கடலூர் – தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி – தேவதாஸ்
- தர்மபுரி – சவுமியா அன்புமணி
- சேலம் – அண்ணாதுரை
- விழுப்புரம் – முரளிசங்கர். ஆனால், காஞ்சிபுரம் தனித் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
மக்களவையில் போட்டியிடாத அன்புமணி? – 2014-ம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். மீண்டும், 2019-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில், இம்முறை தேர்தலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் களமிறக்கப்படவில்லை. மீதமுள்ள காஞ்சிபுரம் ஒரு தொகுதிக்கு மட்டுமே பாமக சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும். அதுவும் தனித் தொகுதி என்பதால் அன்புமணி போடியிடமாட்டார் என்பது உறுதியாக தெரிகிறது.
ஏன் போட்டியில்லை? – தொடர்ந்து, 2016 மற்றும் 2019 என அனைத்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்து வரும் அன்புமணி, இந்தத் தேர்தலில் போட்டியிட்டால் வென்றே ஆக வேண்டும் என்னும் கட்டாயம் ஏற்படும். ஆனால், அந்த அழுத்தத்துக்குள் சிக்கக் கூடாது என முன்பே தேர்தலில் களமிறங்கக் கூடாது என்னும் திட்டத்தில்தான் அன்புமணி இருந்தார்.
குறிப்பாக, தேர்தலில் களமிறங்காமல் மாநிலங்களவை சீட் பெறத்தான் திட்டமிட்டார். அந்தக் கோரிக்கையுடன் தான் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, பாஜக கூட்டணிக்கு ஓகே சொன்னார் அன்புமணி. ஆனால்,உறுதியாகியிருக்கும் பாமக – பாஜக கூட்டணியிலும் பாஜக மாநிலங்களவை சீட் தருவதாக ஒப்புக்கொண்டதாக இரு கட்சிகளுமே அறிவிக்கவில்லை. அதற்கு மழுப்பலான பதிலைத்தான் உதிர்த்து வந்தனர்.
ஆனால், அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி பற்றி பேசி முடிவு செய்வதாகவும் உறுதி அளித்தாக தகவல் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அன்புமணி தேர்தலில் போட்டியிடவில்லை என்பது அவருக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்க வாய்ப்பு இருப்பதை உறுதி செய்திருப்பதாக தோன்றுகிறது. அது தவிர, மத்திய அமைச்சர் பதவிக்கும் காய் நகர்த்துகிறார். அதற்கு மாநிலங்களவை சீட் அவசியம் .
எனவே, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றால் கட்சிக்கு மக்களிடம் ஆதரவும் குறையும், மாநிலங்களவை சீட்டும் கிடைக்காது. எனவே, ’ஸ்மூத்தான மூவாக’ மாநிலங்களவை சீட் பெற திட்டமிட்டிருக்கிறார் அன்புமணி. அதனால், மக்களவைத் தேர்தலில் அவர் களம் காணவில்லை என தகவல் சொல்லப்படுகிறது.