மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து கழக மதுரை கோட்ட தொமுச பொதுச் செயலர் மேலூர் வி.அல்போன்ஸ் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமும் இணைந்து வரும்முன் காப்போம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர்கள் என 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமையகத்திலும், புதூர் பணிமனையிலும் நாளை (மே 25) முதல் மே 27 வரை 3 நாட்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் காலை 10 மணி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும்.

இந்த வாய்ப்பை போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வரும் போது போலீஸார் தடுத்தால் மருத்துவ முகாமிற்கு செல்வதாக சொல்லிவிட்டு வரலாம்.

மறுத்தால் பணிபுரியும் பணிமனை மேலாளரை தொடர்பு கொண்டு போலீஸாரிடம் தெரிவித்தால் அனுமதிப்பார்கள். தடுப்பூசி முகாமிற்கு அனைத்து தொழிலாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.