டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் உயிர் காக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள், வென்டிலேட்டர்கள், ஆர்டிபிசிஆர் கிட்கள், முகக்கவசங்கள் ஆகியவை சென்னை வந்தன.

தமிழகத்தில் பரவிவரும் கரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக நோயாளிகளுக்கான ஆக்சிஜன் செறிவூட்டி படுக்கைகள், ஆக்சிஜன் தயாரிப்புக் கருவிகள், தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

மருத்துவத் தேவைகளுக்காக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். இதையடுத்து 188 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வந்துள்ளது. இதில் ஏற்கெனவே 50 கோடி ரூபாய் ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவை வாங்க ஒதுக்கப்பட்டது. தற்போது 50 கோடி ரூபாய் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கரோனா சங்கிலியை உடைக்க தீவிர தளர்வுகளற்ற ஒருவார முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன், வென்டிலேட்டர் கருவி, உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றைத் தமிழக அரசு, வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.

இந்நிலையில் இன்று டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்கள் 3 டன் மருத்துவ உபகரணங்களுடன் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தன. இரு விமானங்களிலும் 68 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 45 வென்டிலேட்டர்கள், 2 லட்சம் முகக்கவசங்கள், ஒரு லட்சம் கரோனா பரிசோதனைக் கருவிகள் (RT-PCR) வந்திறங்கின.

அதன் பின்பு விமானப்படை வீரர்கள் கண்காணிப்பில், விமான நிலைய ஊழியர்கள் மருத்துவ உபகரணங்களை இறக்கி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளிடம் மருத்துவ உபகரணங்களை ஒப்படைத்தனர். அதன் பின்பு வாகனங்களில் ஏற்றப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அடுத்த சில தினங்களில் மேலும் சில விமானங்களில் டெல்லி, நாக்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு தமிழகம் வரவிருப்பதாகத் தெரிகிறது.