கோவிட் தொற்றுக்கு அடுத்து தீவிரமாக பரவும் நோயாக மங்கி பாக்ஸ் மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன் உலக சுகாதார மையம் மங்கி பாக்ஸ் உலகை அச்சுறுத்தும் நோயாக அறிவித்துள்ளது. பல இடங்களில் மங்கி பாக்ஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் மங்கி பாக்ஸ் நோய் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. காசியாபாத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு அறிகுறிகள் காணப்பட்டு, நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. தீவிரமாக பரவி வரும் சாத்தியம் உள்ள மங்கி பாக்ஸ் வைரல் தொற்று என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை இங்கே பார்க்கலாம்.

மங்கி பாக்ஸ் என்றால் என்ன.?

மங்கி பாக்ஸ் என்பது ஒரு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும். இது ஆங்கிலத்தில் ஜூடோனிக் டிசீஸ் என்று கூறப்படுகிறது, விலங்குகளில் இருந்து முதலில் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவினாலும், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று எளிதில் பரவும். பல நாடுகளில் ஏற்கனவே மங்கி பாக்ஸ் தொற்று பாதிப்பு காணப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. விலங்கிலிருந்து மனிதனுக்கு ஒரு வைரஸ் தொற்று ஏற்படுவது என்பது மிகவும் அரிதானது. அதே நேரத்தில், ஆப்பிரிக்காவிற்கு வெளியே ஏற்பட்ட முதல் வைரஸ் தொற்று மங்கிபாக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கி பாக்ஸ் தொற்று எப்படிப் பரவுகிறது

பாதிப்பு அடைந்த விலங்குடன் ஒரு நபர் நேரடியாக தொடர்பு கொள்ளும் பொழுது அந்த விலங்கு கீறினாலோ, கடித்தாலோ அல்லது அந்த விலங்கின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தின் மீது நேரடியாக எக்ஸ்போஸ் ஆனாலோ, மங்கி பாக்ஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. விலங்கிடம் இருந்து மனிதருக்கு பரவுவது அரிதானது தான். ஆனால், இது உலகஅளவில் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு அதிவேகமாக பரவுகிறது. மேலும், மங்கி பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பாலியல் ரீதியாக இது மற்ற நபருக்கு பரவுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மங்கி பாக்ஸ் அறிகுறிகள்

பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படும் போது அது உடலில் தாக்கத்தை, அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு சில நாட்கள் ஆகும். உதாரணமாக கோவிட் தொற்று உடலில் பாதிப்பை ஏற்படுத்தி அறிகுறிகளை வெளிப்படுத்த 4 – 7 நாட்களாவது ஆகும். அதேபோலத்தான் மங்கி பாக்ஸ் தொற்று பாதித்த நபருக்கு உடனடியாக அறிகுறிகள் தோன்றாது. அறிகுறிகள் வெளிப்படுவதற்கு 7 – 21 நாட்கள் வரை ஆகும். வைரல் தொற்று ஏற்பட்டால் எந்த விதமான அறிகுறிகள் தோன்றும்மோ அதே மாதிரியான அறிகுறிகள் தான் மங்கி பாஸ் தொற்றுக்கும் காணப்படும்.

    • காய்ச்சல்

 

    • தலைவலி

 

    • தசை வலி

 

    • முதுகு வலி

 

    • குளிர்ச்சியாக உணர்வது

 

  • தீவிரமான சோர்வு

இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகு நோய் தொற்று தீவிரமாகும். முகம் மற்றும் உடலிலும் சிவப்பு நிறத்தில் ரேஷஸ் தோன்றும். ஆரம்பத்தில் ஒரு ஸ்கின் அலர்ஜியாக காணப்படும் இந்த ரேஷஸ் நாளடைவில் நிறம் மாறி, கட்டிகளாக உருமாற்றம் அடையும்.  மங்கி பாக்ஸ் தொற்று பாதிப்பு இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை காணப்படும்.

மங்கி பாக்ஸ் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை இருக்கிறதா

வைரஸ் தொற்றுக்கான நேரடியான சிகிச்சை எதுவும் கிடையாது. மங்கிபாக்ஸும் ஒரு வைரஸ் தொற்று என்பதால் அறிகுறிகளை கட்டுப்படுத்த மற்றும் வைரல் தொற்று பாதிப்பை அதிகரிக்காமல் தடுப்பதற்கு ஆன்டி-வைரல் மருந்துகள் மருத்துவர்களால் கொடுக்கப்படும். அது மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு மருந்துகள் கொடுக்கப்படும். எனவே ஆன்டிவைரல் சிகிச்சைகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. அதனால் இதுவரை மங்கி பாக்ஸ் நோய்க்கு இந்த சிகிச்சை சரியானது என்று உறுதியாக எதையும் கூற முடியவில்லை. மங்கி பாக்ஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்காவில் சின்னம்மைக்கு போடப்படும் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இது 85% செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 28 நாட்களில் செலுத்தப்படுகிறது.

கோவிட் தொற்று ஏற்படும் பொழுது எப்படி சமூக இடைவெளி, மாஸ்க் அணிந்து செல்வது மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை தீவிரமாக பின்பற்றினோமோ, அதே போலத்தான் மங்கி பாஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டும்.