நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கை:

“நேற்று (ஜூலை 11) நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதிகளில் நிலவுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

சின்னக்கல்லார் (கோவை) 7, சின்கோனா (கோவை) 5, அவலாஞ்சி (நீலகிரி) 4, சோலையார் (கோவை), மேல் பவானி (நீலகிரி) தலா 3, வால்பாறை பிடிஓ (கோவை), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை), சோளிங்கர் (வேலூர்) தலா 2.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

12.07.2021: மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

12.07.2021, 13.07.2021: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

12.07.2021: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

12.07.2021 முதல் 14.07.2021 வரை: கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

12.07.2021 முதல் 16.07.2021 வரை: கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

12.07.2021 முதல் 16.07.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.