தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு இன்று (ஜூலை 6) மாலை வருகிறார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் செல்கிறார். திருவாரூரை அடுத்த காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், அதே பகுதியில் நடைபெற்றுவரும் கலைஞர் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறார். அதன் பின்பு இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
தொடர்ந்து, நாளை (ஜூலை 7) திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவப் பிரிவு வளாகத்தை திறந்து வைக்கிறார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பிறகு, நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக செல்கிறார்.