தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் கரோனா உதவித்தொகையை இதுவரை பெற இயலாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஜூன் 7-ம் தேதி வரை அதிக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மே 31 வரை 98.4 சதவீதம்குடும்பங்கள் நிவாரண உதவித் தொகையைப் பெற்றுள்ளன.
மீதமுள்ள குடும்பங்களில், நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குச் சென்றது, முகவரி மாற்றம் செய்தும் போக்குவரத்து வசதியின்மையால் நியாயவிலைக் கடைக்கு செல்ல இயலாத நிலைபோன்ற காரணங்களால், நிவாரணஉதவித்தொகையைப் பெறவில்லை என்பது அரசின் கவனத்துக்கு வந்தது. எனவே இந்தக் குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவித் தொகையை ஜூன் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரர்கள் உரியகரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்த்தொற்று அபாயத்தில் இருந்து காத்துக் கொள்ளவும் உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.