பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதிகளில் சுமார், 19,585 குடியிருப்புகளில், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்காக குடிசைமாற்று வாரியம் சார்பில் 3 முதல், 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அதுவும், 1 மணி நேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை ௭ன ௮ந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் துலக்க உள்ளிட்ட வீட்டு உபயோகத்துக்கு மட்டுமேபயன்படுகிறது.

குடிநீர் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்து கின்றனர். ஒவ்வொரு குடியிருப்பிலும், 8 மாடி இருப்பதால் தண்ணீர் தேவைக்காக அடிக்கடி ஏறி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ௮ப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி குடியிருக்கும் இசைவாணி என்பவர் கூறியதாவது: பெரும்பாக்கம் குடியிருப்பில், 186 பிளாக் உள்ளது. ஒரு பிளாக்கில், 8 மாடியில், 96 வீடுகள் உள்ளன. அதேபோல், ஏ முதல் ஐ வரையிலான பிளாக்கில் 192 வீடுகள் உள்ளன. இரண்டு வீட்டுக்கு, 500 லிட்டர் கொண்ட ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. இங்கு, 3 முதல், 4 நாட்களுக்கு ஒரு முறை, 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாகவும் இல்லை. பிற தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறோம். பண்டிகை காலங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் தண்ணீர் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது.

அதுபோன்ற சமயங்களில், 4 பிளாக்குக்கு ஒரு பகுதியில் கீழ்நிலை நீர்த்தக்க தொட்டியில் இருந்து நாங்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்துகிறோம். குடியிருப்புகளில், 8 மாடி உள்ளதால் ஒவ்வொரு முறையும் மேல் தளங்களில் இருப்பவர் தண்ணீர் கொண்டு செல்வதற்கு சிரமத்தை அடைகின்றனர். தினமும் ஒரு மணி நேரம் தண்ணீர் வழங்கினால் எங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

இதுகுறித்து பலமுறை நாங்கள் எடுத்துரைத்தும் குடிசை மாற்று வாரியமோ, குடிநீர் வாரியமோ எங்கள் தேவைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் அரசு இதில் தலையிட்டு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், போதிய அளவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சிப் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளொன்றுக்கு ஒரு நபருக்குத் தலா 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்று, மத்திய பொதுச் சுகாதார பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்துகிறது. இதேபோல நகராட்சியில் நபருக்கு 90 லிட்டர், பேரூராட்சிகளில் 70 லிட்டர், கிராமங்களில் தலா 40 லிட்டர் என்ற வீதத்தில் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் எங்களுக்கு இதில் எதையும் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: குடிநீர் வாரியம் சார்பில் போதுமான குடிநீரை வழங்காததால் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். செம்மஞ்சேரியில் சாலையில் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதை சீரமைத்துள்ளோம்.

தற்போது ஒரு நாள் விட்டு ஒருநாள் வழங்கும் வகையில் நிலைமை உள்ளது. மேலும், பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க, 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் குடிநீர் வாரியம் சார்பில் போதுமான அளவு தண்ணீர் வழங்குவதில்லை.

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தற்போது, 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.8 கோடியே, 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.மேலும், ரூ.8 கோடி மதிப்பீட்டில் பெரும்பாக்கத்துக்கு என, தனியாக குடிநீர் குழாய் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவேறினால் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் தினமும் கிடைக்க வழிவகை ஏற்படும். வ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.