கரோனா இரண்டாம் அலையில், மக்கள் தங்களுக்கு வேண்டிய உதவியைப் பெறுவதற்குச் சமூக வலைதளங்களை நாடும் போக்கு அதிகரித்திருக்கிறது. மருத்துவமனையில் இடம் வேண்டும், ஆக்சிஜன் படுக்கை வேண்டும், ஆக்சிஜன் செறிவூட்டி வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் வேண்டும் என்பன போன்ற உதவி கோரல்கள் சமூக வலைதளங்கள் எங்கும் நிரம்பி வழிகின்றன.
எந்த சமூக வலைதளங்களால் வாழ்க்கையை வீணடிக்கின்றனர் என்று இளைஞர்களை நிந்தித்தோமோ, இன்று அந்தச் சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும், அதன் மூலம் மக்களின் உயிரைக் காப்பற்ற முடியும் என்று இன்றைய தலைமுறையினர் நிரூபித்துவருகின்றனர்.
உயிரைக் காக்கும் சீக்கிய இளைஞர்கள்
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த சத்பீர், தன் ஒன்பது நண்பர்களுடன் இணைந்து ‘சீக் எய்ட்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை புவனேஷ்வரில் 2020-ல் ஆண்டு தொடங்கிச் சேவையாற்றி வருகிறார். இந்த ஆண்டு மார்ச் முதல் நாடு மீண்டும் கரோனாவின் கொடிய தாக்குதலுக்கு உள்ளானதால், இவர்கள் மீண்டும் களத்தில் குதித்தனர். இன்று இவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், முகமூடிகள், பிற மருத்துவ உதவிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கிவருகின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர்களை, இவர்கள் நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு, மருத்துவரின் அறிவுரை ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னரே வழங்குகின்றனர்.
கடந்த பத்து நாட்களாக, சத்பீர் சிங்கின் தொலைபேசிக்கு அழைப்புகள் விடாமல் வந்துகொண்டே இருக்கின்றன. வீட்டுத் தனிமையில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளின் அபயக்குரல்கள் அவை. ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல், இந்தக் குழுவினர் பம்பரமாய் சுழன்று மக்களுக்கு உதவிவருகின்றனர். நோயாளிகளுக்கான மருத்துவ உதவி மட்டுமல்லாமல், முதியவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் மளிகைப் பொருட்களையும் இவர்கள் வழங்கிவருகின்றனர். மாணவர்களையும் வணிகர்களையும் உள்ளடக்கிய இந்தச் சீக்கிய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த உதவி
ஏப்ரல் 23, காலை 11.30 மணிக்கு, “நுரையீரல் முற்றிலும் பாதிப்படைந்துவிட்டது. ஆக்சிஜன் அளவு 70-க்கும் கீழே சென்றுவிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் என் தந்தையை வைத்திருக்க முடியாது என மருத்துவமனை தெரிவித்துவிட்டது. என்னுடைய தந்தை நிச்சயம் இறந்துவிடுவார்” என டெல்லியைச் சேர்ந்த ஆருஷி சத்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். சில நிமிடங்களுக்குள் அவரது இன்ஸ்டாகிராமுக்கு நேரடி குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. அவற்றுள் ஒன்று சுஹைல் ஷெட்டி என்பவரிடமிருந்து வந்தது.
ஆருஷியிடமிருந்து தேவையான விவரங்களை வாங்கிய அவர், உடனடியாகச் செயலில் இறங்கினார். நண்பர்கள், உறவினர்கள், அவர்களின் நண்பர்கள் என அனைவரையும் தொடர்புகொண்டார். இறுதியில் ஆக்சிஜன் செறிவூட்டி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அதைப் பெற்றுக்கொண்டு காரை அதிவேகமாக ஓட்டிவந்து, அதிகாலை 2.20-க்கு ஆருஷி சத்தாவிடம் ஒப்படைத்தார். இன்று ஆருஷியின் தந்தை உயிருடன் இருக்கிறார். ‘முகம் தெரியாத அந்த உன்னத மனிதர் என் தந்தையைக் காப்பாற்றிவிட்டார்’ என்று அவர் கண்ணீர் மல்கக் கூறுகிறார்.
உதவியே உயர்வு
பேரிடர்கள் நிகழும்போதெல்லாம், மனிதனுக்கு உதவும் கரங்களாக சக மனிதனின் கரங்களே இருந்துள்ளன. சக மனிதனுக்கு உதவும் நோக்கில், சுய விருப்பு, வெறுப்பு, சித்தாந்த வேறுபாடுகள், கொள்கைப் பிடிப்பு எல்லாவற்றையும் மீறி மனிதம் என்கிற ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்து, தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ளும் உயரிய பண்பு மனிதர்களுக்கே உரித்தானது. இந்தப் பெருந்தொற்றுக் காலமும் அதற்கு விதிவிலக்கல்ல.