அதிமுக செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த வா.புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம்,பழனிசாமி ஆகியோர் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக பதவி வகித்தவர் வா.புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக செய்தித் தொடர்பாளராகவும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராகவும் பதவி வகித்துவந்தார்.

இந்நிலையில் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்தஜூன் 14-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாகவும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாகவும் புகழேந்தி மீது குற்றம்சாட்டி, அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருந்தனர். மேலும் அவருடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் அவதூறு வழக்கை புகழேந்தி தொடர்ந்திருந்தார். வழக்கு மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்று 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்து வருகிறேன். தமிழகத்தில் குற்றவியல் ரீதியாகவோ அல்லது உரிமையியல் ரீதியாகவோ எந்தவொரு வழக்கும் என் மீது கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது பல்வேறு தேர்தல்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்ட போது, கட்சி விதிகளின்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராகவும் அங்கம் வகித்தேன். திடீரென என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில் என்னைப் பற்றி தெரிவித்துள்ள அவதூறு கருத்துகள், எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. கட்சியை விட்டு நீக்கும் முன்பாக எந்தவொரு நோட்டீஸோ அல்லது விளக்கமோ கோரவில்லை. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் செயல்படவில்லை.

என்னை கட்சியில் இருந்து நீக்கியதை ஊடகங்களில் வெளியான செய்தி மூலமாகவே அறிந்தேன். எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின்கீழ் குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மானநஷ்ட இழப்பீடாக உரிய அபராதமும் எதிர்மனுதாரர்களுக்கு விதிக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.அலிசியா முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் வரும் ஆக.24-ம் தேதிநேரில் ஆஜராக சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.