ஆபத்தானது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் மத்திய அரசு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“மத்திய அரசு, ஆன்லைன் விளையாட்டுகளைக் கண்காணித்துப் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டு விளையாடுவதால் அவர்களின் பணம், மனம், வாழ்க்கை சீரழிகிறது.

ஆன்லைன் விளையாட்டு விளையாடி பலர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. இனியும் இது தொடரக்கூடாது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு விளையாடத் தடை செய்யப்பட்டது. ஆனால், தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கு பதிலாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பெயரில் வெவ்வேறு விளையாட்டுகள் ஆன்லைனில் வந்துள்ளன.

இதிலும் சிறியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு விளையாடி நேரத்தையும், பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துவிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தை ஏற்படுத்தும் ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்தையும் நம் நாட்டில் தடை செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடாமல் இருக்கவும் கணினி, மொபைல் ஆகியவற்றைப் பயனுள்ள வகையில் தேவைக்கு மட்டுமே வீட்டு நலன், நாட்டு நலன் கருதி பயன்படுத்தவும் அன்புக்கட்டளை இட வேண்டும்.

மத்திய அரசு, ஆன்லைன் மூலம் விளையாட்டுகளைக் கொண்டுவந்து பணம் பறிக்கும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையை வீணாக்கும் தொழிலை முற்றிலுமாக முடக்க வேண்டும். மீறி வேறு பெயரில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்த நிறுவனமும் ஆன்லைனில் விளையாட்டுகளை நடத்த முயன்றால் அனுமதி வழங்கக் கூடாது.

உலக சுகாதார நிறுவனம் 2018ஆம் ஆண்டிலேயே சர்வதேச நோய்களின் வகைப்பாட்டில் இணைய விளையாட்டால் வரும் பாதிப்பையும் சேர்த்துள்ளது. குறிப்பாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே மத்திய, மாநில அரசுகள், பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்தது போல ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டு உள்பட பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் முழுமையாகத் தடை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.