உள்ளூர் மக்களுக்கும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் சாம்சங் முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர், புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும், சாம்சங் நிறுவனத்தை அறிமுகப்படுத்த தேவையில்லை என்றும், உலகளவில் அதிக சந்தை மதிப்பை கொண்ட 8ஆவது நிறுவனம் சாம்சங், அதனுடன் கையொப்பமிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும், உள்ளூர் மக்களுக்கும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் சாம்சங் முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறிய அவர், கலைஞரின் சாதனைகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு இது ஓர் உதாரணம் என்றும், கலைஞர் தொடங்கி வைத்த நிறுவனத்தின் கூடுதல் ஆலையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி எனவும் பெருமிதம் கொண்டார்.

தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவன முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சராக இருந்தபோது வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், நடப்பாண்டில் இந்த நிறுவனத்தின் முதலீடு 1,800 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இது தனிப்பட்ட நிறுவனத்தின் வளர்ச்சி அல்ல, தொழில் துறையின் வளர்ச்சி எனவும் குறிப்பிட்டார்.

இந்திய அளவில் மின்னணுவியல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முன்னணி வகிக்க வேண்டும். பின் முதல் என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் இலக்கு என்றும், 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் எனவும், சாம்சங் நிறுவனம் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.