தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என, இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று (ஆக.31) கூடியது.

அப்போது, பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை முழுவதும் தடுக்கப்படுமா எனக் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “போதை மற்றும் மனமயக்கும் பொருட்கள் தடைச் சட்டம் 1985-ன் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலே போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்க அந்தச் சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.