சென்னை: தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கரோனா வைரஸ் பலவகையாக உருமாறி பரவிக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, கப்பா என நிறைய உருமாற்றம் நிகழ்ந்துவிட்டது. இறுதியாக ஒமைக்ரான் வந்தது. அதிலும் பி ஏ 1 பி ஏ 2 என்று 7 வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவுவதாக கூறினார்கள்.

தமிழகத்தில் இதுவரை பி ஏ 1 மற்றும் பி ஏ 2 மட்டும்தான் வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழகத்தில் தற்போது பி ஏ 4 கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டால், உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்குள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் செய்யப்பட்ட சோதனை மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. உடனடியாக அவர்களது மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பியதில் ஒருவருக்கு, அது பி ஏ 4-ல் ஒரு வகை என்பதும், மரபணுவில் ஒரு உருமாற்றம், புதிய வகை வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது ஒமைக்ரானில் ஒரு புதுவகை. ஒமிக்ரானில் உள்ள 7 வகைகளில் இதுவும் ஒன்று, 4-வது வகையைச் சேர்ந்தது. இந்த வகையான தொற்று ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அங்கு 4-வது அலை, 5-வது அலை என்று குறிப்பிட்டனர்” என்று அவர் கூறினார்.