மதுரை: மதுரை நெல்பேட்டை முதல் விமான நிலையம் வரை உள்ள சாலையில் அமைக்கப்பட இருந்த பறக்கும் பாலம் திட்டம் கைவிடப்பட்டநிலையில், இரு வழிச்சாலையாக உள்ள இந்த சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

மதுரைக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மீனாட்சியம்மன் கோயில், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், உயர் நீதிமன்றம், கல்வி நிறுவனங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அதுபோல், மதுரையை சேர்ந்த தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் விமானங்கள் மூலம் பிற நகரங்களுக்கு செல்கிறார்கள். உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை விமானநிலையத்திற்கு அதிகமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

 

 

விமானப் பயணிகள் பெரும்பாலும், நெல்பேட்டை-அவனியாபுரம் சாலை வழியாகதான் பெருங்குடி விமான நிலையத்திற்கு செல்கிறார்கள். ஆனால், இந்த சாலை இரு வழிச்சாலையாக குறுகலாக உள்ளதால் விமானப் பயணிகள், முன்கூட்டியே வீடுகளில் இருந்து புறப்பட்டாலும் விமானங்களை சில நேரங்களில் பிடிக்க முடியவில்லை. அதுபோல் வெளிநாடுகள், நகரங்களில் இருந்து விமானங்களில் வந்திருங்குவோர் நெல்பேட்டை, தெற்குவாசல் போக்குவரத்து நெரிசலை தாண்டி நகரத்திற்குள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் நெல்பேட்டையில் இருந்து வில்லாபுரம் வழியாக அவனியாபுரம் வரை 5 கி.மீ., பறக்கும் பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்தது.

நில ஆர்ஜிதம் செய்து பறக்கும் மேம்பாலம் அமைப்பதற்கு ஆரம்பத்தில் நெல்பேட்டை, தெற்குவாசல், அவனியாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பையையும் மீறி இந்த திட்டத்தை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால், திடீரென்று இந்த பறக்கும் பாலம் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது, மதுரை விமான நிலையம் மற்றும் நகர வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தற்போது மாநில நெடுஞ்சாலைத் துறை பறக்கும் பாலத்திற்கு பதிலாக நெல்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள இருவழிச்சாலையை நான்குவழிச்சாலை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனால், நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்கான முன் ஏற்பாடு பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நான்கு வெளி வீதிகளில் புதிய மேம்பாலங்கள், உயரமான கட்டிடங்கள் எதுவும் தற்போது கட்டக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. நாங்கள் திட்டமிட்ட பறக்கும்பாலம் நெல்பேட்டை-விமான நிலையம் பறக்கும் பாலம், தெற்கு வெளி வீதி, கீழ வெளி வீதி வழியாக செல்கிறது. அதனால், நாங்கள் இந்த இடங்களில் பறக்கும் பாலம் அமைக்க முடியவில்லை. இந்த பகுதி சாலைகளில்தான் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் பாலம் அவசியமாக தேவைப்படுகிறது.

 

 

வில்லாபுரம் ரயில்வே மேம்பாலத்திற்கு பிறகு விமான நிலையத்திற்கு பறக்கும் பாலம் தேவையில்லை. அதனால், ஒட்டுமொத்தமாக பறக்கும் பாலம் திட்டத்தை கைவிட்டு நில ஆர்ஜிதம் செய்து தற்போது இரு வழிச்சாலையாக உள்ள நெல்பேட்டை-ஏர்போர்ட் சாலையை நான்கு வழிச்சாலையாக போட உள்ளோம். தற்போது திட்ட மதிப்பீடு, நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கை, வரைப்படம் தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் விரைவாக தொடங்கிவிடும். நான்கு வழிச்சாலை அமைந்தாலே விமான நிலையத்திற்கு தாமதமில்லாமல் மக்கள் சென்று வரலாம்’’ என்றனர்.