சென்னை: விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்துவதை போலீஸார் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தரஜினி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், சேலம் மாவட்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
சம்மன்: இந்த வழக்கு, நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், மனுதாரருக்கு எதிராக பெறப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி தெரிவித்ததாவது:
போலீஸாரின் விசாரணையில் குற்றவியல் நடுவர் தலையிட முடியாது என்பதால், போலீஸார் தங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுவாக, போலீஸாரின் விசாரணையில் உயர்நீதிமன்றமும் தலையிடுவதில்லை. அதேநேரம் விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் போலீஸாரால் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தால், நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்காது.
இந்த வழக்கை பொறுத்தவரை விசாரணைக்கு ஆஜராகும்படி மனுதாரருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அதன்படி மனுதாரர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். விசாரணைக்கான சம்மன் எழுத்துப்பூர்வமாக, ஆஜராக வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விசாரணை நடைமுறைகளை காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்யவேண்டும். குறிப்பாக விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்துவதை போலீஸார் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.