வடகிழக்கு பருவமழை ஓய்ந்து கடந்த சில வாரங்களாக வெயிலடிக்கத் தொடங்கியிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த சீஸனுக்கு உப்பளங் களை தயார் செய்யும் பணிகளை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்து க்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீஸன் முடிவடையும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தான் தொடங்கியது. இதனால் உப்பு உற்பத்தியும் அக்டோபர் மாத இறுதியில் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து நவம்பர் மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்தது. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்தது. வழக்கமாக டிசம்பர் மாத இறுதி வரை மழை இருக்கும். இதனால் ஜனவரி மாதத்தில் தான் உப்பளங்களை அடுத்த சீஸனுக்கு தயார் செய்யும் பணிகளை மேற்கொள்வார். ஆனால், இந்த ஆண்டு கடந்த சில வாரங்களாக மழை பெய்யாமல் வெயில் அடிப்பதால் உப்பளங்களை சீரமைக்கும் பணிகளை உற்பத்தி யாளர்கள் முன்கூட்டியே தொடங்கி யுள்ளனர்.

தூத்துக்குடியில் நவம்பர் மாதம் பெய்த அதிக மழை காரணமாக உப்பளங்களில் வழக்கத்தை விட கூடுதல் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏஆர்ஏஎஸ்.தனபாலன் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக மழை இல்லாமல் வெயில் அடிப்பதால் சுமார் 70 சதவீத உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

உப்பள பாத்திகளில் சேர்ந்துள்ள கழிவுகள், மணலை அகற்றும் பணிகள், உடைப்பு ஏற்பட்ட கரைகளை சரி செய்யும் பணி, சாலைகள், பாதைகளை சீரமைக்கும் பணி உள்ளிட்டவை தற்போது நடைபெற்று வருகின் றன. மழை பெய்யாமல் இருந் தால் இப்பணிகள் 6 வாரங்களில் முடிவடையும். ஜனவரி கடைசியில் உப்பளங்கள் உற்பத்திக்கு தயாராகி, பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து புது உப்பு கிடைக்கும்.

10% கையிருப்பு

உப்பளங்களை சீர்படுத்த ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். தற்போது தொழி லாளர்கள் பற்றாக்குறை இல்லை. எனவே, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மழையால் 60 சதவீதம் அளவுக்கு தான் உப்பு உற்பத்தி நடைபெற்றது. அதில் 50 சதவீத உப்பு விற்பனையாகி விட்டது.

இன்னும் 10 சதவீத உப்பு மட்டுமே கையிருப்பில் உள்ளது. இது ஜனவரி கடைசி வரை போதுமானதாக இருக்கும். அதன் பிறகு புது உப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைக் கிறது. ஒரு டன் உப்பு ரூ.2,500 முதல் 3,500 வரை விலை போகிறது என்றார்.

தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு டன் உப்பு ரூ.2,500 முதல் 3,500 வரை விலை போகிறது.