முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தாமதமாவது தமிழக அரசு நிர்வாகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

”பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும்தான் தமிழ் வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் தேவையின்றித் தாமதப்படுத்தப்படுவது தேர்வர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அச்சட்டத்தின்படி அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால் அதை மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். அதைத் தடுக்க வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2020 மார்ச் 16ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, சுமார் 9 மாத காலத்திற்குப் பிறகு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது.

புதிய தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, 2020ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் தமிழக அரசுக்கு 18 துணை ஆட்சியர், 19 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 69 முதல் தொகுதி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. சட்டம் தாமதமாக நடைமுறைக்கு வந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி முதல் தொகுதிப் பணிக்கானத் தேர்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, சில மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தொடர்ந்த மேல்முறையீடும் கடந்த ஜூலை மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே முதல் தொகுதி பணிக்கான தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி விட்டன.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அது செல்லாததாகி விட்டதால், புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி 20% இட ஒதுக்கீடு வழங்கி புதிய முடிவை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்கள் அதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் தாக்கல் செய்து, அதற்கான சரிபார்ப்பும் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்து விட்டது. ஆனால், அதன்பின் 2 மாதங்கள் நிறைவடைந்தும் புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின்படியான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அது முதல் தொகுதிப் பணிக்காகக் காத்திருக்கும் தேர்வர்களிடம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி பயன்பெறுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 4 நாட்களில் முடிவடைந்துவிட்டது என்பதால், அடுத்த 2 நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டிருக்க முடியும். ஆனால், இரு மாதங்களாகியும் இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. அதற்கான காரணத்தையும் டிஎன்பிஎஸ்சி இன்னும் தெரிவிக்கவில்லை. டிஎன்பிஎஸ்சி முதல் தொகுதிப் பணிக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், முதல் நிலைத் தேர்வுகளின் முடிவுகளே இன்னும் வெளிவராமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் வேறு பல போட்டித் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வின் முடிவு தெரியாததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர்களால் மற்ற போட்டித் தேர்வுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தாமதம் ஆவது தமிழக அரசு நிர்வாகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால், அடுத்த முதல் தொகுதித் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்க முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக முதல் தொகுதிப் பணிகளுக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முடியவில்லை.

எனவே, இனியும் தாமதிக்காமல் டிஎன்பிஎஸ்சி முதல் தொகுதிப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிட்டு, முதன்மைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் தொகுதி 2, தொகுதி 4 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் அறிவித்து, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கத் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.