“திமுகவைப் பொறுத்தவரை 2 மணிக்கு மேல் கச்சேரியை ஆரம்பிக்கப்போவதாக கூறுகின்றனர். கச்சேரியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் செய்துகொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது: “குண்டர்கள், ரவுடிகள் முழுமையான அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றவொரு அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையத்தில் நானும் கட்சியின் சட்ட ஆலோசகர் குழு உறுப்பினர் பாபு முருகவேல் மற்றும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று மனு அளித்தோம்
தேர்தல் ஆணையமும் உறுதியளித்தது, அதன்படி தற்போது வரை, தேர்தல் அமைதியாக நடக்கின்ற சூழ்நிலை உள்ளது. மாலை வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் வரை, இதே நிலை நீடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, திமுகவைப் பொறுத்தவரை இனிமேல்தான் கச்சேரியை ஆரம்பிக்கப்போவதாக கூறுகின்றனர். அதனால் 2 மணிக்கு மேல் அந்த கச்சேரியை அனைவரும் காண்பீர்கள் என நினைக்கிறேன். கச்சேரியை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள், முன்னேற்பாடுகள் எல்லாம் செய்துகொண்டிரு்பபாதக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.
காலை 10.30 மணி வரை எந்த பிரச்சினையும் இல்லை. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும். தற்போதுகூட கோவையில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது. அண்டா, குண்டா, ஹாட் பேக்ஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், அனைவருக்கும் ஹாட் பேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.500, ரூ.1,000, துறைமுகம் தொகுதியெல்லாம் பணம் அப்படி விளையாடுகிறது. சென்னையில் பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை.
பணம், பொருள் என எல்லாம் கொடுத்தால் கூட இந்த ஆட்சிக்கு புத்தி வரவேண்டும், இனியாவது இந்த ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்” என்றார் ஜெயக்குமார்.