டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த சந்தையாக மாறிய பிறகு, வர்த்தக நடைமுறைகளுக்காகப் பொதுவான நாணயமாக அமெரிக்க டாலரை பயன்படுத்தி வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர், பணவீக்கம் ஆகியவற்றால் பல்வேறு நாடுகளும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு, சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் வருமானமும் உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 80 ரூபாயாக சரிந்தது. ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், மத்திய அரசின் தவறான கொள்கைகளே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஒரு பக்கம் எனில், இந்திய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் அளவும் 200 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. அதே போல், அரசுக் கடன் பத்திரங்கள், கம்பெனி கடன் பத்திரங்கள் போன்றவற்றிலிருந்தும் முதலீடுகள் வெளியேறுகின்றன. இதனால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் அபாயம்:
வாகன உதிரிபாகங்கள், மின் சாதனங்கள் போன்றவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றின் விலையும் உயரும். அதிக அளவில் இறக்குமதி செய்யக்கூடிய சமையல் எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரிக்கும். வெளிநாடுகளில் படிப்பவர்களின் செலவும், வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்பவர்களின் செலவுகளும் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பு ஒரு புறம் இருக்க, ரூபாயின் மதிப்பு சரிவால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதேப்போல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பணம் அனுப்பினால் இங்கு இருப்பவர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும். அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.