லக்னோ: எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணிய கடுமையாக விமர்சித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். குடும்ப மற்றும் சாதிய அரசியலை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இண்டியா என்ற பெயரை மாற்றியுள்ளதன் மூலம் கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகள் எதையும் மூடி மறைக்க முடியாது. மக்கள் அவர்களது கடந்த கால ஆட்சி குறித்து நன்கு அறிவர். அது காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணாமுல் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் என எதுவாக இருந்தாலும் சரி. இந்த மாற்றத்தின் மூலம் அவர்கள் மக்களை ஏமாற்ற முடியாது. குடும்ப மற்றும் சாதிய அரசியலை இந்த கட்சிகள் முன்னெடுக்கின்றன. அதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்துவதே அவர்கள் விருப்பம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சமூக நீதியை காத்திடவும், மக்களின் வாழ்வு மேம்படவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எங்கள் அணியின் கேப்டன் பிரதமர் மோடி தான். அவர் தான் இந்தியாவை தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார். கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் எங்களது வாக்குறுதியில் சொன்னதை தான் செய்து வருகிறோம்.

எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மணிப்பூர் வீடியோ மக்களவை கூடுவதற்கு ஒருநாள் முன்னதாக வெளியாக காரணம் என்ன? இதற்கு பின்னால் சதி உள்ளது. நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த இப்படி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர். வரும் 2024 தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் ஆட்சி செய்யும் அதிகாரத்தை மக்கள் வழங்க உள்ளனர். அதில் எனக்கு சந்தேகம் இல்லை” என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.