பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பையும் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் டிச.18-ம் தேதி வரை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.