விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று அவர்வெளியிட்ட அறிக்கையில், “விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்துபல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் பெண்ணை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும்.

இதுபோன்ற கொடூரமான குற்ற வழக்குகளை, கால தாமதமின்றி விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழல் உருவாகவில்லை என்பதையே, விருதுநகரில் நடந்த இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

எனவே, பாதிக்கப்படும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழலை காவல் துறையும், தமிழக அரசும் உருவாக்க வேண்டும். இனி, இதுபோன்ற கொடூரங்கள் நடக்காதவாறு உறுதியான நடவடிக்கைகளை காவல் துறையும், தமிழக அரசும் எடுக்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.