அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். கடந்த ஆறு மாதத்தில் திமுக அரசு புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், வெள்ளாளபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திமுக திட்டமிடாத காரணத்தால்தான் தற்போது மக்கள் அவதிப்படுகிறார்கள். இனியாவது அரசு முன்னெச்சரிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் தூர்வாரி தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு கணக்கெடுத்து நிவாரணத் தொகையை மத்திய அரசிடம் கேட்கும் பட்சத்தில் எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்களும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மாநில அரசு கோரும் நிதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்வோம்.

அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தைத் தந்ததால்தான், அதனை திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது. கடந்த ஆறு மாதத்தில் திமுக அரசு புதிய திட்டங்கள் ஏதுவும் கொண்டுவரவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.