தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்து ரூ.100 ஐ கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வீரர்கள் சதமடிக்காத நிலையை பெட்ரோல் விலை சரி செய்துவிட்டது என விமர்சித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் கம்பெனிகளிடம் மத்திய அரசு ஒப்படைத்ததால் நாள்தோறும் விலையை ஏற்றி, ஏற்றி பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்த நிலையில் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

கரோனா பேரிடர் காலத்திலும், கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்திலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மட்டும் குறையாமல் நாள்தோறும் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தாலும் விலைகள் குறைக்கப்படாமல் உயர்ந்துக்கொண்டே வருகிறது.

இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஆக உயர்ந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100 ஐத் தாண்டியது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை. இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை.

இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது, மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்”.

இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்