புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை பின்பற்றுமாறு சமூக வலைதளங்கள், டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதைக் கண்காணிக்க திருவனந்தபுரம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் சசி தரூர் தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் ட்விட்டர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். புதிய ஐடி விதிமுறைகள் அமலாக்கம் குறித்து வரும் 18-ம் தேதி விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய ஐடி விதிமுறைகள் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது. பிரதமர் மோடி நிர்வாகம் விவசாயிகள் போராட்டத்தை கையாண்ட விதம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் ட்விட்டரில் விமர்சித்தனர். இதை முடக்குமாறு அரசு விடுத்த கோரிக்கையை அந்நிறுவனம் கேட்கவில்லை. இதைத் தொடர்ந்தே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை கொண்டு வந்து அதை அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்தது. இதைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் வகை உள்ளது. நீல நிற குறியீட்டை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோரது கணக்கில் இருந்து நீக்கியது பெரும் பிரச்சினையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.