சென்னை: தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை!

2022ம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கி விட்டது. அதனால், தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது!

நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பதை விட இது மிகவும் மோசமான நிலையாகும். 12-ம் வகுப்புத் தேர்வா… நீட் தேர்வா… எதில் கவனம் செலுத்துவது என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டும். அது எந்தத் தேர்விலும் கவனம் செலுத்த விடாமல் செய்து விடக் கூடும்!

இந்தக் குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராமப்புற ஏழை மாணவர்கள் தான். நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக நீட் விலக்கு பெற சாத்தியமுண்டா? என்பதையும் மாணவர் நலன் கருதி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்!” என்று அன்புமணி கூறியுள்ளார்.