தொடரும் ரசிகர்களின் செயலால், ‘வலிமை’ படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. அதனை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் குறைந்து வெளிநாட்டு அனுமதிக்காகப் படக்குழு காத்திருக்கிறது.

இதனிடையே, ‘வலிமை’ படம் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்புமே வெளியிடப்படாமல் உள்ளது. படம் தொடங்கப்பட்டபோது உள்ள அறிவிப்புடன் இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை தயாராகிவிட்டாலும், கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆனால், அஜித் ரசிகர்களோ ‘வலிமை அப்டேட்’ வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ஒவ்வொரு பிரபலத்திடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சார சமயத்தில் அரசியல் தலைவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. இதனால், அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது, விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘பீஸ்ட்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களை மிகவும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், மீண்டும் ‘வலிமை அப்டேட்’ என்று கேட்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ‘வலிமை அப்டேட்’ என்ற பேனரைப் பிடித்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமன்றி, மீண்டும் ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்பான மீம்களையும் வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள். இந்தச் செயலால் ‘வலிமை’ படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.