சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மணல் குவாரிகளை இயக்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் என தென்னக லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் வெளிட்ட அறிக்கை:

தினசரி 2,500 லோடு மணல்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கட்டுமானத் தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. சென்னைக்கு தினசரி 2,500 லோடு மணல் தேவைப்படுகிறது.

தற்போது, சுமார் 500 லோடு மணல் மட்டுமே சென்னைக்கு வருகிறது. மணல் இல்லாமல் கட்டுமானத் தொழில் பாதிப்படைந்துள்ளது. தற்போது, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மணல் குவாரி மட்டுமே செயல்படுகிறது.

2 லட்சம் தொழிலாளர்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள், எண்ணூர் துறைமுகம், தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய கட்டுமானப் பணிகள், சென்னைமாநகராட்சி கட்டுமானப் பணிகள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகட்டுமானப் பணிகள், தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளின் கட்டுமானப் பணிகள், பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இந்த மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானத் தொழிலை நம்பி, 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

எனவே, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் அதிக அளவில்மணல் குவாரிகளை இயக்கதமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இந்த தொழிலை நம்பி இருக்கும் கட்டுமான தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள் குடும்பங்களை வாழ வைக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.