நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறி மற்றும் பழ வகைகள் தரமற்றதாக இருந்தால், விலையை உயர்த்தி விற்பனை செய்வது தெரியவந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் அன்றாடத் தேவையான காய்கறி மற்றும் பழ வகைகள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டு தோட்டக்கலைத்துறை, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய மேற்கண்ட அலுவலகங்களில் வாகனங்களில் பதிவு எண், தள்ளுவண்டியாக இருந்தால் அது பற்றிய விவரம், வியாபாரியின் பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண், வியாபாரம் செய்ய உள்ள இடம் ஆகியவற்றைத் தெரிவித்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அனுமதிச் சீட்டு பெறும்போது காய்கறி மற்றும் பழ வகைகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்யக்கூடாது. அதேபோல, தரமற்ற பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்லக்கூடாது என, அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடமாடும் வாகனங்களில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதோ அல்லது விலையை உயர்த்தி விற்பனை செய்வதோ தெரியவந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியப் பகுதிகளில் காய்கறிகளை விற்பனை செய்ய 707 வாகனங்கள், 182 தள்ளுவண்டிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகள், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் ஆகிய பேரூராட்சிகள், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய ஒன்றியப் பகுதிகளில், நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு சுமார் 256 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனைக்காக, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதில், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நடமாடும் வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், வட்ட வழங்கல் அலுவலர், வேளாண் அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர், துணை தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் இருப்பார்கள்.

இக்குழுவினர் நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் தரமாக உள்ளதா? நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள், பழ வகைகள் விற்பனை செய்யப்படுகிறதா? எடையளவு சரியாக உள்ளதா? என்பதை நேரடியாகச் சென்று ஆய்வு செய்வார்கள்.

இதில், தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதோ அல்லது விலையை உயர்த்தி விற்பனை செய்வதோ தெரியவந்தால் அனுமதிச் சீட்டு உடனடியாக ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 244 நடமாடும் வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யப்பட்டதின் மூலம் இன்று ஒரே நாளில் 94.15 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு 16 லட்சத்து 94 ஆயிரத்து 700 ரூபாய் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.