சென்னை: அரசுப் பள்ளிகளில் ஓய்வுபெறும் அனைத்து பணியாளர்களையும் தலைமை ஆசிரியர்களே பணி விடுவிப்புசெய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர்களையும் அந்தந்த தலைமை ஆசிரியர்களே பணிவிடுப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், பணியில் இருந்து விடுவிக்கும் முன்னர் சார்ந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, தணிக்கைத் தடை ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

இதுதவிர ஓய்வு பெறும் ஆசிரியர்களிடம் இருந்த பணிகள் அனைத்தும் முறையாக மறு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இந்த பணிகளில் எந்த புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.