கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாகவே மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. அவர்கள் பாடங்களை கவனிக்கும் விதமாக, அவர்களுக்கான பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்தகட்ட வகுப்புகளுக்கு செல்கின்றனர். அந்தவகையில் அவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்றபடி, ஏற்கனவே புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. அவ்வாறு அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் வகுப்பு, பாடங்கள் வாரியாக பாடப்புத்தகங்களை பிரித்து வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக மாணவ-மாணவிகளை நேரில் அழைக்காமல், வீடுகளுக்கே சென்று வழங்குவதா? அல்லது வேறு எந்த வழியில் வழங்கலாம்? என்பது பற்றி கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன்படி, மாணவர்களுக்கு விரைவில் இந்த விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு சில தனியார் பள்ளிகள் ஏற்கனவே அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்கிவிட்ட நிலையில், அவர்கள் கேட்டு இருந்த பாடப்புத்தகங்களை அனுப்பும் பணியிலும் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஈடுபட்டு இருக்கிறது.