தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (57). இவரது நேர்முக உதவியாளர் செல்லமுத்து (50). இவர் அமைச்சருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்லமுத்துவுக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

செல்லமுத்து அமைச்சருடன் நேரடி அலுவலகத் தொடர்பில் இருந்ததால், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் கடந்த 14-ம் தேதி இரவு கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அமைச்சரின் பிற உதவியாளர்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் எனப் பலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக, அமைச்சர் அலுவலகத்தினர் தெரிவித்தனர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ட்விட்டரில் கூறிருப்பதாவது:

”காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் முழுமையாக நலம் பெற்று, மக்கள் பணியைச் சிறப்புடன் தொடர வேண்டும்”.

இவ்வாறு கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.