மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க,பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து வலியுறுத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் அனைத்து கட்சிக் குழுவினர் நேற்று டெல்லி சென்றனர்.
மேகேதாட்டுவில், புதிய அணைகட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை பல்வேறு வழிகளில் தமிழக அரசு தடுத்து வருகிறது. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, கடந்த ஜூலை 12-ம் தேதி அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களின் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.
3 தீர்மானங்கள்
இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதல்கட்டமாக வழங்குவது, அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இக்கூட்டத்தில்3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்துகட்சிக் குழுவினர் டெல்லி சென்றுபிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர்கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 11மணிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ள திமுக எம்பி.யான ஆர்.எஸ்.பாரதி, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக சட்டப்பிரிவுத் தலைவர் பால் கனகராஜ்,காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமகதலைவர் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக எம்.பி.சின்ராஜ், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் நேற்று மாலை 5.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இன்று மாலை சந்திப்பு
இவர்கள் அனைவரும் அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இன்று மாலை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்கின்றனர். பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்ததும் அவரையும் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியைகர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.