இந்தக் காலத்தில், இளவயது தற்கொலைகள் அதிகரிக்க என்ன காரணம்? வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இல்லாததே இதற்குக் காரணம். பிரச்சினைக்குத் தீர்வு காணல் என்பது, வாழ்க்கைத் திறன்களில் (Life Skills) மிக முக்கியமான ஒன்றாகும். பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளியாமல் இருக்க வேண்டுமானால், முதலில் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். பல தீர்வுகள் உள்ள அந்தப் பிரச்சினைக்கு, ஏற்ற ஒரு தீர்வினை முடிவு செய்யும் திறன் நமக்குள் இருக்க வேண்டும்.

ஒன்றைப் பற்றி சிந்திக்க வேண்டுமெனில், கற்பனை சக்தி இருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், கற்பனை சக்திக்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கலாம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் உள்ளன. ஆனால் அத்தனை விதங்களில் சிந்தித்துப் பார்க்க இயலாமல், தீர்வு இல்லை என தவறாய் நினைத்து, ஒரு நிமிடத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இப்போது பெருகிவிட்டது. இவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதோடு, குடும்பத்தினரின் மன நிம்மதியையும், குழி தோண்டிப் புதைத்து விடுகின்றனர்.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது, நமது கற்பனைத் திறன் தூண்டப்படுவதில்லை. கண்ணால் பார்த்து, காதால் கேட்டு அதை அப்படியே உள்வாங்கிக் கொள்வதால், திரைப்படத்தைப் பார்க்கும் போது, நமக்கு எந்த கற்பனையும் தூண்டப்படுவதில்லை. ஆனால், ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது,கண்களால் படிப்பதை, நாம் மனதால் கற்பனைசெய்து பார்க்கிறோம். அதனால் நம் மனதின் சிந்தனை சக்தி அதிகரிக்கிறது. பல கோணங்களில் சிந்திக்கும் பழக்கம் இருந்தால், பிரச்சினையைக் கண்டு பயப்படாமல் தெளிவாய் வாழ வழி ஏற்படும்.

“காட்டின் வழியே சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு புலி உருமும் சத்தம் கேட்டு அவன் திடுக்கிட்டான்” என்ற வரியை நாம் படிக்கும் போது, அடுத்த வரி படிப்பதற்குள், நம் மனதின் கற்பனை சக்தி தூண்டப்பட்டு, அவன் அந்த புலியுடன் போராட முடிவெடுக்கிறான், அவன் அருகில் உள்ள மரத்தில் ஏறிக் கொள்கிறான், உதவிக்கு யாரையோ கூப்பிடுகிறான், புலி வரும் திசைக்கு எதிர்திசையில் ஓடி, தப்பிக்க முயல்கிறான்.

இவ்வாறு பல கற்பனைகள் நம் மனதில் தோன்றும். ஆனால், இதையே ஒரு திரைப்படத்தில் பார்க்கும் போது, அடுத்த காட்சிக்குரிய ஒலி, ஒளி அனைத்தும் கேட்பதால், நம் மனதில், அந்தக் காட்சி பற்றிய எந்த கற்பனையும் எழுவதில்லை. அந்தக் காலத்தில் எல்லா ஊரிலும் வாரந்தோறும், கதாகாலட்சேபம், பிரசங்கம் போன்றவை நடத்தப்படும். இவையும்கூட கற்பனை சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால், இந்தக் காலத்தில் மீடியாவில் மூழ்கி, சிந்தனை சக்தியை படிப்படியாய் அனைவரும் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நம் மனம் தெளிவு பெறவும், சிந்தனைத் திறன் அதிகரிக்கவும் வேண்டுமானால், புத்தகங்கள் வாசிப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். இந்த எண்ணத்தில்தான் நமது அரசும், பள்ளிக் கல்வித் துறையும் புத்தக வாசிப்பை முறைப்படுத்தவும், அதிகப்படுத்தவும் பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றன.

பள்ளி நூலக புத்தகங்கள் பதிவிடவும், மாணவர்களுக்குரிய புத்தகத்தை தேர்ந்தெடுக்கவும், அதனை பொறுப்பாசிரியர் கவனிக்கவும் ஏற்றவகையில் ஒரு செயலியை உருவாக்கி, அதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய பகீரத பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர். இந்த முயற்சியை, ஆசிரியர்கள் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்தினால், தற்போதுள்ள பல பிரச்சினைகளை மாற்றி, குழந்தைகளை நெறிப்படுத்த வழி ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குங்கள். சிந்தனைத் திறனை அதிகரித்து, கற்பனை சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். தற்கொலை எண்ணம் ஏற்படாமல் தவிருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் விளங்குங்கள்.