உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.45 கோடி செலவில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அடிக்கல் நாட்டினார்.

லக்னோவில் உள்ள அய்ஷ்பாக் பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு இல்லத்தை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அய்ஷ்பாக்கில் சுமார் 5,493 சதுர அடியில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.45.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நினைவு இல்லத்தை ஒட்டி 750 பேர் அமரும் வசதி கொண்ட கலையரங்கமும் அமைக்கப்படவுள்ளது.

இதுதவிர நூலகம், ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் உள்ளிட்டவையும் இங்கு அமைக்கப்படுகின்றன. இந்த நினைவு இல்லத்தில் அம்பேத்கரின் 25 அடி சிலையும் நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இரண்டு நாள்சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒருபகுதியாக, அம்பேத்கர் நினைவு இல்லத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய அவர், அன்றைய தினம் மாலையே டெல்லி புறப்பட்டுச் சென்றார்.