ஓசூர் தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்கும்போது சுமார் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் தளி தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து ஓசூர் நகரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஓசூர் – ராயக்கோட்டை சாலை சந்திப்பு எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

”2019-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 350 தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் காரணமாக டாடா நிறுவனம் மூலமாக ரூ.4,700 கோடி முதலீட்டில் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க, செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டம் ஓசூர் பகுதியில் தொடங்கப்படுகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு முதல் கட்டமாக ரூ.4,700 கோடியும், இரண்டாவது கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடியும், மூன்றாவது கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடியும் என சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ஓசூரில் முதலீடு செய்யப்படுகிறது. அதேபோல ஓலா நிறுவனம் மூலமாக ரூ.2,400 கோடி முதலீட்டில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஓசூரில் தொடங்கப்படுகிறது. இப்படிப் பல்வேறு புதிய தொழில்கள் வருவதற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அதிமுக ஆட்சியில் புதிய தொழில்களே தொடங்கப்படவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். நான் சொன்ன தொழிற்சாலைகள் எல்லாம் ஓசூர் பகுதியில் தொடங்கப்படுகின்றன. புதிய தொழிற்சாலைகளால் ஓசூரில் சுமார் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல விவசாய வளர்ச்சிக்கு ஓசூர் கொடியாளம் அணையிலிருந்து சுற்றியுள்ள 50 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலமாக இப்பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

ஓசூரில் சர்வதேச மலர் ஏலம் மையம் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரிசி குடும்ப அட்டைக்கு ஒரு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் மற்றும் வாஷிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச கேபிள் டி.வி. இணைப்பு ஆகியவையும் வழங்கப்படும். இப்படிப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.