சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்களுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கத்தை அளித்தார். தனது அரசு செய்து முடித்த பணிகள், தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது குறித்து விரிவாக பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய முழு உரை:
தடியால் தட்டித் தமிழினத்தை எழுப்பிய தந்தை பெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைத்த அண்ணாவையும், தனித்தனி ஊரில் பிறந்தவர்களையும் ‘உடன்பிறப்பு’ என்ற ஒற்றைச் சொல்லால் ஈர்த்த தலைவர் கருணாநிதியையும் நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத் தொடங்குகிறேன்.
ஆளுநர் கடந்த 21ஆம் தேதி, இந்த மாபெரும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக்கூடிய நல்லதோர் உரையை ஆற்றியிருக்கிறார். அவருக்கு இந்த அரசின் முதல்வர் என்ற முறையிலும், தனிப்பட்ட நிலையிலும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, எனது உரையைத் தொடங்குகிறேன்.
‘தமிழக முதல்வர் என்ற இந்த அரிய ஆசனத்தைப் பார்க்கும்போதும், அதிலே அமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளையும், முதல்வராகப் பொறுப்பேற்று, அந்த வரலாற்றைப் படைத்த தனிப்பெரும் நாயகர்களையும் சுற்றிச் சுழல்கின்றன. அதன் காரணமாக மெய்சிலிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும், உண்டாகின்றன.
குறிப்பாக, திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி, 1920ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கான உரிமைகளை அங்கீகாரம் செய்து, அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைப் புகுத்தி, சமுதாய மாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூக நீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி.
ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்ட அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில் எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிய கட்சி. திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்றைக்கு இருந்த மிகக் குறைவான அதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி, பட்டியலின மக்களது நலனைப் பேணியது.
திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி, அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும் போட்ட சமூக நீதி – சமத்துவ சமுதாயம் காணும் அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றைய திமுக ஆட்சி.
1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் முதன்முதலாக திமுக அமர்ந்தபோது, “நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் இந்த ஆட்சி” என்று அண்ணா சொன்னார். அதேவழியில், எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான் என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, அவரின் தொடர்ச்சி நான். ஏன், இந்த அரசு, தமிழினத்தை நம்மால்தான் வாழவைக்க முடியும் – தமிழினத்தை நம்மால்தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் தமிழக மக்கள். இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை, எமது தொலைநோக்குப் பார்வையைத்தான் ஆளுநர் தமது உரையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
அன்று நீதிக்கட்சியின் முதலாவது (First Prime Minister) பிரதம அமைச்சராக இருந்த கடலூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த காமராஜர், திமுகவைத் தோற்றுவித்து, ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி, முதல்வராக இருந்த அண்ணா, முதல்வராக 19 ஆண்டுகள் ஆட்சி செய்த சாதனைச் செல்வர், நம்முடைய தலைவர் ஆகியோரையும், முதல்வராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும், இந்த நேரத்தில் நினைவுகூர்வது என்னுடைய கடமை ஆகும். நமது முன்னோர்களை நினைவுகூர்வது என்பது, தமிழர் பண்பாட்டின் தவிர்க்க முடியாத முக்கியமான கூறு என்பதை மறந்துவிட முடியாது.
கடந்த 2 நாட்களாக இந்த அவையிலே நடந்திருக்கக்கூடிய விவாதத்திலே, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த 22 உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது, தங்களுடைய சீரிய கருத்துகளை மையப்படுத்தி இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். உரையாற்றிய உங்கள் அனைவரது கருத்துகளையும் இந்த அரசுக்கு நீங்கள் சொல்லும் ஆரோக்கியமான ஆலோசனைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் நான் அண்ணாவினுடைய அரசியல் வாரிசு. கருணாநிதியின் கொள்கை வாரிசு. சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது முன்வைத்த கோரிக்கைகள், தொகுதி சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளன. துறை அதிகாரிகளோடு கலந்தாலோசித்து நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஐந்து ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசு இது. இதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் – கொள்கைகள் – கோரிக்கைகள் ஆகிய அனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமே முழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது, அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின் ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான்.
அனைவருக்கும் எளிதில் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், இது ஒரு “ட்ரெய்லர்” மாதிரி. “முழு நீளத் திரைப்படத்தை விரைவில் வெள்ளித்திரையில் காண்க” – என்று முன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்ததைப்போல, இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ள உள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடுகளைக் களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் – அவற்றைச் சந்திப்பதற்கான சாதுரியங்கள் என அனைத்தும் விரைவில் இந்தப் பேரவையிலே வைக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
“பொறுத்தார் பூமி ஆள்வார்”என்பது பழமொழி. நாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம்; இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். அதில் உங்களுக்கு ஒருதுளிகூட சந்தேகம் வேண்டாம்.
“தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்றோடு 49 நாட்கள்தான் ஆகி இருக்கின்றன. ஆனாலும், என் மீதும், திமுக அரசின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக, இப்போதே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கலாமே என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முதலில் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் எந்தவிதமான சந்தேகமும், யாரும் படவேண்டிய அவசியமில்லை. ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து நாங்கள் மக்களுக்குக் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம். அதற்கான பணிகளில்தான் எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்.
பல்வேறு ஊடகங்களில் திமுக அரசினுடைய முதல் முப்பது நாட்கள் எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டு, அதற்கு பொதுமக்கள் அளித்த பதில்களை அனைவரும் பார்த்திருப்பீர்கள். திமுகவுக்கு வாக்களிக்கவில்லையே என்று பலரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்களுக்கு வாக்களித்தவர்கள், இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலும், வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய வகையிலும், எனது பணி இருக்கும்” என்று திமுக வெற்றி பெற்றவுடன் ஊடகங்கள் வாயிலாக நான் தமிழக மக்களுக்குத் தெரிவித்தேன். அந்த வகையில், நம்முடைய பணிகள் சிறப்பாக அமைந்துள்ளன என்று எண்ணி, இன்னும் சிறப்பாகச் செயல்பட உத்வேகம் கொள்கிறேன்.
ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டவுடன், தலைமைச் செயலகத்திற்குச் சென்று நான் பொறுப்பேற்றேன். பொறுப்பேற்றவுடனே, கரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்க உத்தரவிட்டேன். முதல் தவணையான 2000 ரூபாய் மே மாத்திலேயே வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று மேலும் 2000 ரூபாய் வழங்கப்பட்டது. மொத்தம் 8,393 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 11 லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்திருக்கின்றன. ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளோம். அது 16.5.2021 முதலே செயல்பாட்டுக்கு வந்தது.
அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டோம். திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டது. என்னிடம் தரப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்த்து வைக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தைத் தொடங்கினேன். இன்றுவரை, இன்றைக்குக் காலையிலே வரை – ஆதாரத்தோடு புள்ளிவிவரங்களோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால், 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கான கட்டணத்தை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் அரசே செலுத்த உத்தரவிட்டோம். இதனால் 20 ஆயிரத்து 520 பேர் பயனடைந்துள்ளனர். கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கக்கூடிய 330 பேருக்கு 77 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் (War Room) உருவாக்கப்பட்டது. தடுப்பூசிதான் உயிர்க்கவசம் என்பதால், தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாகவே மாற்றப்பட்டது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து 47 நாட்களில் 65 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையைவிட இது இருமடங்கு அதிகமாகும்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கரோனாவைப் பற்றி அனைவரும் பேசினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது கரோனா உச்சத்தில் இருந்தது. மே 7ஆம் நாள், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை நாளொன்றுக்கு 26 ஆயிரமாக இருந்தது. அது 36 ஆயிரமாக உயர்ந்து கொண்டு இருந்தது. மருத்துவ வல்லுநர்களை விசாரித்தபோது, ‘இது 50 ஆயிரம் ஆகும். ஏன், அதைவிட தாண்டிக்கூட போகும்’ என்றெல்லாம் சொன்னார்கள்.
தொடக்கத்தில் கடும் சவாலாகத் தெரிந்தது. ஆனால் அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, அப்படியே படிப்படியாகக் குறைந்து 7000-க்கும் கீழ் வந்துவிட்டது. இன்னும் படிப்படியாகக் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி இல்லை என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். “இல்லை, இல்லை” என்ற சொல்லை இல்லாமல் ஆக்கியிருக்கிறோம் இந்த ஆட்சியிலே.
புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டன. ஆக்சிஜன் வசதி கொண்டவையாக, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக உருவாக்கப்பட்டன. கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் 89 ஆயிரத்து 618 படுக்கைகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை இந்த மன்றத்தின் வாயிலாகப் பொதுமக்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கரோனா மூன்றாவது அலை வரக் கூடாது. வந்தாலும், அதனைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகத்தான் தொற்று குறைந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் ஆட்சியிலே அதிகபட்சமாக 7000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை வைத்து இப்படிச் சொல்கிறார். மே 6ஆம் தேதி வரைக்கும் முதலமைச்சராக இருந்தது அவர்தான். கடந்த 22ஆம் தேதி அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 26.2.2021ஆம் தேதியுடன் தனது கடமையும் பொறுப்பும் முடிந்ததைப் போலப் பேசினார்.
“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 26-2-2021 அன்று 481 பேருக்குத்தான் கரோனா பாதிப்பு இருந்தது. அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. அதனால், அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. இருந்தாலும், தலைமைச் செயலாளருடன் பேசி மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தக் கூறினேன். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கூறினார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால், தேர்தல் ஆணையத்தில் இருந்து பதில் கடிதம் தலைமைச் செயலாளருக்குத்தான் வந்தது. தலைமைச் செயலாளர்தான் ஆலோசனை நடத்தினார். நான் முதல்வராக இருந்தபோது கரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது” என்று பேசினார். 26.2.2021-க்குப் பிறகு அன்றைய முதல்வர் எந்த அரசுப் பணிகளையும் பார்க்கவில்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி.
12.4.2021 அன்று கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கோட்டையில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகளோடு அன்றைய முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த பாதிப்பு 6,618. 17.4.2021 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை அனைத்தும் அன்றைய முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது.
அன்றைய தினம் கரோனா பாதிப்பு 8,449. 18.4.2021 அன்று உயர் அதிகாரிகளை அழைத்து அன்றைய முதல்வர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதற்கு மறுநாள் தமிழ்நாட்டில் பாதிப்பு 10,941. 26.4.2021 அன்று அதிக அளவிலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு அன்றைய முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
அன்றைய தினம் தமிழ்நாட்டில் பாதிப்பு 15,659 ஆகிவிட்டது. 28.4.2021 தடுப்பூசி கொள்முதல் குறித்து அன்றைய முதல்வரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பு சொல்கிறது. அன்றைய பாதிப்பு 16,665. இதுதான் உண்மையான நிலைமை.
அதாவது, ஏப்ரல் மாதத்தில் முழுமையாக அன்றைய முதல்வர் மேற்பார்வையில்தான் பணிகள் நடந்துள்ளன. ஆனால், கரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அன்றைய தினம் ஏற்பட்ட பாதிப்பு 19,588. இவை அனைத்துக்கும் முந்தைய அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மார்ச் 6ஆம் தேதியில் இருந்தே தமிழ்நாட்டில் கரோனா ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.
மார்ச் 30ஆம் தேதியே தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது என்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு கல்வித் துறைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏப்ரல் 6 முதல் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது. பாதிப்பு எண்ணிக்கை 5000-த்தில் இருந்து 19 ஆயிரம் ஆக ஆனது. எனவே, கரோனாவை அதிமுக அரசு கட்டுப்படுத்திவிட்டது என்ற வாதம் மிக மிகத் தவறானது.
அவரை யாராவது கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அதைப் போல பிப்ரவரி 26 முதல் மே 6 வரையிலான இரண்டு மாத ஆட்சியை அதிமுக மறந்து விட்டதா என்று நான் கேட்க விரும்புகிறேன்.
ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்ததும் அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரம் எனக் கூடியது. இத்தகைய மோசமான சூழலைக் கட்டுப்படுத்தியதுதான் திமுக அரசின் மகத்தான சாதனை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கரோனா வந்தபோது அதுபற்றி எதுவும் தெரியவில்லை, மருத்துவர்களுக்கே தெரியவில்லை, மருந்தும் இல்லை, தடுப்பூசியும் இல்லை என்று இப்போதிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். அந்தக் குழப்பமான சூழலில்தான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டச் சொன்னேன். பலமுறை நான் சொன்னேன். “ஸ்டாலின் என்ன டாக்டரா?” என்று இப்போதிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். நான் உள்ளபடியே கோபப்படவில்லை.
உண்மை என்னவென்றால், கரோனாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் டாக்டர் ஆகிவிட்டார்கள். அதுதான் உண்மை. எல்லோருமே பாதி டாக்டராகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேல் நாம் யாருமே, யாரையுமே நீங்கள் டாக்டரா என்று கேட்க முடியாது. அந்த அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.
நான் எதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன் என்றால், அனைத்துத் தரப்பினரது ஆலோசனையையும் கேட்கவேண்டும் என்பதற்காகத்தான். திமுக ஆட்சி அமைந்ததும், சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவை உள்ளடக்கி ஒரு குழுவை நியமித்தோம். அதிமுக சார்பிலேகூட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட அதில் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவின் ஆலோசனைகளைப் பெற்றுதான் இன்றைய அரசு செயல்படுகிறது.
எனவே, கரோனா தடுப்புப் பணிகள் குறித்த உறுப்பினர்கள் அனைவரது கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் தங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூலமாக அரசுக்கு நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் உரிமையோடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், இது அரசியல் பிரச்சினை அல்ல, கட்சிப் பிரச்சினையும் அல்ல, ஆட்சியின் பிரச்சினையும் அல்ல, மக்கள் பிரச்சினை.
மக்கள் நலன் சார்ந்திருக்கக்கூடிய பிரச்சினை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, ‘நான் தவறாகச் சொல்லவில்லை, அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்’ என்று சொன்னார். அதற்காக அவருக்கு நான் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து செயல்பட்டு – அனைத்து தரப்பினரது ஆலோசனையையும் பெற்று கரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும் என்று நான் உறுதிபட இந்த அவையிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திமுக அரசு செய்துள்ள சாதனைகளைத் தொடர்ந்து சொல்ல வேண்டுமானால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் – மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் – அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், அதாவது 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ற வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் தாக்கப்பட்டு, காயமடைந்த 94 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க சட்டமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையத்தையும், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தையும் செயல்பட வைக்கப் பிரதமரை வலியுறுத்தியிருக்கிறோம். ஊடகவியலாளர்கள் கரோனா தொற்றால் இறக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என அறிவித்து அதையும் செயல்படுத்தியிருக்கிறோம். சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆக்சிஜன், ரெகுலேட்டர்கள், ஆக்சிஜன் நிரப்ப சிலிண்டர்கள் வாங்கப்பட்டன.
கரோனா தொற்றால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.3000, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சம், கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என இப்படிப் பல்வேறு சலுகைகளை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறோம்.
திருக்கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணியாற்றக்கூடிய அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம், மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, காவலர் முதல் ஆய்வாளர் வரைக்கும் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை, திருநங்கையருக்கு நிவாரண உதவி அளித்திருக்கிறோம்.
கரோனா தடுப்புப் பணியில் இறந்த மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் கலைஞர் பெயரில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, அவர்கள் வாழ கனவு இல்லம் அறிவிக்கப்பட்டது. தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவைப் போற்ற கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் நெல்சேமிப்பு கிடங்குகள் – உலர் களங்கள் அமைக்கப்படும். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆணையம், தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 8 ஆளுமைகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
14 வகையான மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 977 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்ட 15 எண்ணெய்க் கிணறுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேட்டூர் அணை ஜூன் 12ஆம் நாள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து – 4061 கிலோ மீட்டர் தொலைவிலான காவிரி கால்வாய்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குத் தேவையான 25 முக்கியக் கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்தித்து அவற்றை விளக்கமாக எடுத்து வைத்திருக்கிறோம்.
மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தோம். டவ்தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மின்னகம் என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம்.
அதுமட்டுமின்றி, மூன்று நாட்களுக்கு முன்பு ஆளுநரின் உரை மூலமாக ஏராளமான கொள்கை அறிவிப்புகளைச் செய்திருக்கிறோம். இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று கூறுவோர்க்கு இதுதான் என்னுடைய பதில்.
இதுவரை ஐம்பது நாட்களுக்குள் செய்திருக்கக்கூடிய மிக முக்கியமான சாதனைகளில் சிலவற்றைத்தான் நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன். இவற்றை எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால், மக்களுக்கு நிச்சயமாக நன்கு தெரியும்.
ஆளுநர் உரை குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை. யானையும் இல்லை” என்று சொன்னார். யானை என்று சொன்னதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கு கால்கள்தான் யானையினுடைய பலம். ‘சமூக நீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை’ ஆகிய நான்கின் பலத்தில்தான் திமுகவும் நிற்கிறது; இந்த அரசும் நிற்கிறது. இந்த ஆளுநர் உரையைப் படிப்பவர் கண்களுக்கு சமூக நீதியும், சுயமரியாதையும், தமிழுக்கும், தமிழர்க்கும் நாங்கள் செய்ய இருக்கும் நன்மைகளும், மாநில உரிமைகளுக்கான எங்களது முழக்கங்களும் நிச்சயம் தெரியும்.
தமிழ்நாட்டின் கருவூலம் எப்படி திசைமாறி, உருமாறி, தேய்ந்து, ஓய்ந்து கிடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சீர்படுத்துவதே எங்களுடைய முதல் வேலை. அதையெல்லாம் மனதிலே வைத்துத்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறோம்.
இன்றைய நிதி நிலைமையில், ஏழை, எளிய, நடுத்தர மக்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் – வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதால், அவர்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளித்து வருகிறோம். இருப்பதை எப்படிப் பெருக்குவது, பெருக்கியதை எப்படிப் பகிர்ந்தளிப்பது, மாநிலத்தின் வளத்தையும், நலத்தையும் எப்படிப் பேணுவது – உயர்த்துவது என்பதை, ஆழ்ந்து, ஆராய்ந்து, “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்” செயலாற்றுவோம் என்ற என்னுடைய உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகிறேன்.
அவசரப்பட்டு, ஆளுநர் உரையிலே அது இல்லையே, இது இல்லையே என்றெல்லாம் சொன்னீர்களே, திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. அவற்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
* வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை
* மீண்டும் உழவர் சந்தைகள்
* இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்க வேண்டும்.
* சிறு குறு தொழில்கள் மீட்டெடுப்பு
* வட மாவட்டங்களில் தொழில் பெருக்கம்
* புதிய துணை நகரங்கள்
* தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழர்க்கு முன்னுரிமை
* 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு
* மேகதாது அணைக்கு எதிர்ப்பு
* கச்சத்தீவு மீட்பு
* நீட் தேர்வு ரத்து
* உள்ளாட்சித் தேர்தல்
* பட்டியலினத்தவர் பணியிடம் நிரப்புதல்
* சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும்
* திருக்கோயில்களின் பராமரிப்பைச் செம்மைப்படுத்த – ஆலோசனை வழங்க மாநில அளவில் உயர்மட்ட ஆலோசனைக் குழு
* பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் மகளிர் விடுதிகள்
* சச்சார் குழுவின் பரிந்துரைகளை இந்த அரசு திறம்பட செயல்படுத்தும்
*சேவைகள் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்
* நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை
* பொருளாதாரத்தை மீட்க வல்லுநர் குழு
– இப்படி எத்தனையோ அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருப்பவைதான்.
ஆளுநர் உரையிலே இருப்பதை எல்லாம் விடுத்து, இது இதெல்லாம் இல்லையே என்று ஆதங்கப்படுபவர்களுக்கு, “திருச்சியிலே நின்றுகொண்டு, அங்கே இருக்கும் மலைக்கோட்டையையும், கரைபுரண்டோடும் காவிரியையும், கல்லணையையும் காணாமல், “தில்லை நடராசர் எங்கே?” என்று கேட்பவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?” என்று அண்ணா சொன்னதையே நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எங்களது பழைய கொள்கைகளுக்கு மாறுபாடு இருந்தால் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அதைக் குறிப்பிடவில்லை, இதைக் குறிப்பிடவில்லை என்பது சரியான குற்றச்சாட்டாக இருக்க முடியாது. ஒரு புத்தகத்தில் அனைவருடைய பெயரும் இருக்க வேண்டுமென்று சொன்னால், அது டெலிபோன் டைரக்டரியாகத்தான் இருக்க முடியும். இந்த ஆளுநர் உரை என்பது திமுக அரசாங்கம் போகும் பாதையை டைரக்ட் பண்ணும் புத்தகம்.
இந்த உரை மீது கருத்து சொன்ன, ஆலோசனைகள் சொன்ன அத்தனை பேருக்கும், அதேபோன்று, நன்றி சொல்லி பாராட்டிய அத்தனை பேருக்கும், ஒருவேளை நன்றி தெரிவிக்க மறந்த அனைவருக்கும் நான் இந்த நேரத்திலே நன்றி சொல்ல விரும்புகிறேன். அதேபோல், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய கருத்துகளுக்குச் செயல் வடிவம் கொடுத்திடுவதற்கான சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளபோதும், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சில பிரச்சினைகள் (Complications) வருவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் (Post COVID Clinics) தொடங்கப்படும். தேவைப்படும் உயர் சிகிச்சை மருத்துவர்களோடு (Specialist Doctors) இந்த மையங்கள் செயல்படும்.
நம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதே அவர்களின் முன்னேற்றத்திற்கும் நம் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நோக்கத்தோடுதான் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்போம் என்று அறிவித்திருக்கிறோம்.
இதன் முதற்கட்டமாக, செய்யாற்றில் 12,000 பேருக்கும், திண்டிவனத்தில் 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமையவுள்ளன. கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன்,நியூட்ரினோ,கூடங்குளம் அணு உலை, சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
ஏற்றத்தாழ்வை இடித்து, சமூகத்தைச் சமப்படுத்தப் போராடிய தந்தை பெரியார் பெயரால் 240 சமத்துவபுரங்களைக் கட்டினார் கருணாநிதி. அந்த சமத்துவபுரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாத அவல நிலையில் இப்போது இருக்கின்றன. அந்த சமத்துவபுரங்கள் உடனடியாகச் சீரமைக்கப்படும். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
திமுக சார்பில் தேர்தல் அறிக்கையில், திருக்கோயில்களின் புனரமைப்புக்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற வாக்குறுதி இருந்தது. அதற்கு முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் 100 கோடி ரூபாய் செலவில் திருக்கோயில்களைத் தொன்மை மாறாமல் புதுப்பிக்க, திருக்குளங்களைச் சீரமைத்திட, திருத்தேர்களைப் புதுப்பித்து திருவிழாக்கள் நடத்திடத் தேவையான பணிகள் 100 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும்.
இங்கே பேசிய உறுப்பினர்களில் பலர், ஆளுநர் உரையைப் பலபடப் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்தும், ஒரு சிலர்-குறிப்பாக, எதிர்க்கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் குறைகள் என சிலவற்றைச் சுட்டிக்காட்டியும் பேசி இருக்கிறார்கள். ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை என்பதைப் போலப் பேசுவது, உண்மையான நிலை என்று ஆகிவிடாது; மக்களும் அப்படிக் கருதிவிட மாட்டார்கள்.
அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு, அதிகாரிகளிடையே நான் பேசும்போது முதல் கூட்டத்திலே நான் சொன்னேன். “எனக்குப் புகழுரை வேண்டாம்; உண்மைகளைச் சொல்லுங்கள்” என்று வலியுறுத்தி இருக்கிறேன். அப்படி நான் சொன்னது ஆக்கபூர்வமான கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும் என்கிற அந்த நல்லெண்ணத்தில்தான்.
ஆனால், நிறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இல்லாத குறைகளை உருவாக்கி, ஓங்கி உரைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிகாட்டுவது ஆகாது. எனினும், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் குறைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லத்தான் செய்வார்கள். அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சி, மாற்றுக் கருத்துகளை, வேறுபட்ட எண்ணங்களை வெளிப்படுத்த ஜனநாயகம் இடம் அளித்திருக்கிறது. புகழுக்கு மயங்கவும் மாட்டேன்.
குறைகூறுவதால் குன்றிவிடவும் மாட்டேன். ஏனென்றால் இரண்டையுமே அதிக அளவு எனது வாழ்க்கையில் நான் பார்த்துவிட்டேன். புகழுரைகள், என்னை அதிகளவு அடக்கமானவனாகவும், புகழுரைக்கும்போது அது என்னை மேலும் பக்குவப்படுத்துவதற்கு நான் பயன்படுத்துவேன். எச்சரிக்கை உள்ளவனாகவும் அது ஆக்கி இருக்கிறது. ஏன், என் மீது இதுவரை சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் ஆகியவை என்னை மேலும் மேலும் உழைக்கவும், உண்மையாக இருக்கவும்தான் தூண்டுகிறது. அப்படித்தான் நான் பயன்படுத்தப் போகிறேன்.
ஏனெனில், இந்த மன்றத்தில் வைக்கப்பட்ட புகழுரை, இகழுரை இரண்டையும் எனக்கான உரமாகவே கொண்டு எனது அரசியல் பயணத்தை நான் தொடர்கிறேன். ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், அந்தப் பகட்டோடு நான் என்றைக்கும் நடந்துகொண்டது கிடையாது. அந்தத் தலைவருக்கு கடைசித் தொண்டனாகத்தான் நான் நடந்துகொண்டேன். இது எனது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். அந்தத் தலைவருக்கும் தெரியும்.
என்னுடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அந்த அன்புத் தலைவர், வங்கக் கடலோரத்தில் அல்ல, கோடிக்கணக்கான மக்களுடைய இதயத்தில் குடிகொண்டிருக்கிறார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அவர் இடத்தில் தலைமைத் தொண்டனாகத்தான் நான் உட்கார்ந்திருக்கிறேனே தவிர, அண்ணாவின் இடத்தில் தலைவர் கருணாநிதியின் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன் என்ற கர்வம் எனக்கு ஒரு துளியும் கிடையாது.
இன்றல்ல, அது என்றும் இருக்காது. இத்தகைய மனநிலை கொண்ட நான் இந்த அவைக்குச் சொல்ல விரும்புவது, அரசியல் எல்லைகளைக் கடந்து, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, தமிழ்நாட்டு மக்களுக்காக நம்மை நாமே ஒப்படைத்துக் கொள்வோம் என்பதுதான்.
ஆறாவது முறையாக, திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திடும் வகையில், எப்படி நானும், அமைச்சர் பெருமக்களும் ஓயாது, ஓடியாடிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோமோ, இதையெல்லாம் இந்த நாடறியும்; நல்லவர்கள் அறிவார்கள்.
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி முதல் ‘இந்து’ என்.ராம் வரை, பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு, ஒன்றிய அரசின் முன்னாள் நிதி அமைச்சரும் பொருளியல் சிந்தனையாளருமான ப.சிதம்பரம் தொடங்கி, நடுநிலை நாளேடுகள் மற்றும் இதழ்கள் வரை, திமுக அரசு குறுகிய காலத்தில் நிகழ்த்தியிருக்கக்கூடிய இந்தச் சாதனைகளை வரவேற்றுப் பாராட்டி இருக்கிறார்கள். திமுக அரசின் சாதனைகளுக்கு அவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் மனமுவந்து வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னுடைய நன்றிக்குரியவர்கள்.
எங்களைப் பொறுத்தவரையில், தேர்தல் கால வாக்குறுதிகளை, வாக்குகளை ஈர்ப்பதற்கான காந்தம் எனக் கருதாமல், நாட்டின் மேம்பாட்டுக்கு, நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதியாகச் செய்தே தீர வேண்டிய செயல்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்பது, கருணாநிதி எங்களுக்குத் தந்த ஆரம்பக் கல்வி அது.
திமுக மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை ஆட்சி அமைக்கக் காரணமான தமிழ்நாட்டு மக்களை இருகரம் கூப்பி, என்னுடைய தலை தாழ்த்தி, எனது பணிவு அனைத்தையும் ஒருங்கே திரட்டி மீண்டும் வணங்குகிறேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.