மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்

தீபாவளிக்கு சிம்புவின் மாநாடு படத்தை வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் ஈஸ்வரன் வெளியானது. சுசீந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களை கவரவிலலை. அதைத் தொடர்ந்து மாநாடு படத்தை முடித்துத் தந்தார் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் மாநாடு அரசியல் படமாக உருவாகியிருக்கிறது. கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரேசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் எதிர்பாராத அப்டேட் ஒன்றை இன்று காலை அறிவிக்க இருப்பதாக படத்தை தயாரித்திருக்கும் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். என்ன அப்டேட்டாக இருக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகும் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுபற்றி கூறியிருக்கும் அவர், “நிறைவான மகிழ்வில் மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்” என தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகிறது. அதனுடன் அஜித்தின் வலிமை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், வலிமையை வேறொரு தேதியில் வெளியிட போனி கபூர் முடிவு செய்ய, மாநாடு படத்தை அண்ணாத்தயுடன் களமிறக்குகிறார்கள். ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான தீபாவளியாக இருக்கப் போகிறது.