கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு. அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
`இந்து தமிழ் திசை’ நாளிதழ், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன்ஸ் நிறுவனம் இணைந்து ‘நலமாய் வாழ’ என்ற தலைப்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை இணையவழியில் நேற்று நடத்தின. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்துப் பேசியதாவது:
`நலமாய் வாழ’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தும் `இந்து தமிழ்திசை’ நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஜனவரிமாதம் 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் தயக்கம் இருந்தது. ஆனால் தற்போது தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். நீண்டவரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர்.
கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாகும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. உயிரிழப்பும் தடுக்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்தும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து, தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. முகாம்களுக்கு வர முடியாதவர்களுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தமிழக அரசே தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும். விரைவாக அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுகாதார செயலர் தலைமையில் குழு
லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் முகமது கனி கூறியதாவது: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 500 மருத்துவர்களுக்கு பணி வழங்குவதாக கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதுவரை 500 பேருக்கு பணி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக எந்த தகவலும் அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு வரவில்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எப்எம்ஜிஇ (FMGE)தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறவேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்றிவிட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து, மருத்துவராகப் பணியாற்றும் நடைமுறை அமலில் உள்ளது.
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் நடைமுறைகள் மிகவும் தாமதமாக உள்ளன. 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மற்ற மாநிலங்களைப்போல எளிமையான நடைமுறைகளை தமிழகத்தில் பின்பற்ற வேண்டும்.
இதேபோல, ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற செலுத்தவேண்டிய ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான கட்டணத்தை குறைக்க வேண்டும். வரும்18-ம் தேதி எப்எம்ஜிஇ தேர்வுநடைபெற உள்ளது. ஊரடங்கால்நேரடிப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் மருத்துவர்கள் உள்ளனர். பெரும்பாலானோர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அதனால், தேர்வை 4 முதல் 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி தேசிய தேர்வுகள் வாரியத்திடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள மையங்களையே ஒதுக்க வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்காக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) ஆகியோரைக் கொண்டஒரு குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, தமிழகத்தில் மருத்துவப் பணி செய்பவர்களின் பணிநெறிமுறைகள் குறித்து பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி பேசினார்.
கரோனா தொற்று அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசின்மருத்துவ ஆலோசகர் பி.குகானந்தம், கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் அதிக அளவு பயன்படுத்துவதால் பார்வைத் திறன் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மற்றும் கண் பாதுகாப்பின் அவசியம்குறித்து மருத்துவர் பிரதீபா தேவி நிவேன் ஆகியோர் பேசினர்.