கரோனா தொற்றால் கடந்த ஆண்டு காலமான பாடும் நிலா பாலுவுக்கு இன்று 75-வது பிறந்த நாள். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

பாடும் நிலா பாலு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்த எஸ்பிபி கடந்த ஆண்டு உலகெங்கும் பரவிய கரோனா பேரரக்கனால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார்.

கரோனா முதல் அலை மதிப்புமிக்க பல உயிர்களைப் பறித்தது. அதில் பலராலும் மறக்கமுடியாதவர் எஸ்பிபி. தனது குழுவினருக்கு அளித்த வாக்குறுதிக்காக மனைவியின் மறுப்பையும் மீறி, “ஒன்னும் இல்லம்மா. இதோ இப்படிப் போய்விட்டு இப்படி வந்துவிடுவேன்” என ஹைதரபாத் இசை நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

”கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், எனக்கு ஒன்றும் ஆகாது. சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்புவேன்” என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி காணொலி மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென உடல் நிலை மோசமானதாக செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நாடெங்கும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. உடல் நிலை தேறி வந்தார். ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், அணையும் முன் பிரகாசமாக எரியும் தீபம் அது என அப்போது யாருக்கும் தெரியாது. ரசிகர்களை, திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக மீண்டும் எஸ்பிபியின் உடல்நிலை மோசமானது. அதன் பின்னர் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை ஊட்டும் விதமாக செப்.25 அன்று அந்தச் செய்தி வெளியானது.

ரசிகர்களை 55 ஆண்டு காலம் தனது குரலால் கட்டிப்போட்ட எஸ்பிபி இனி இல்லை என்ற செய்தியே அது. எஸ்பிபியின் மறைவுக்கு அரசு காவல்துறை மரியாதை வழங்கியது. கரோனா தொற்றை மீறி அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். திருவள்ளூரில் உள்ள தோட்டத்தில் எஸ்பிபி அடக்கம் செய்யப்பட்டார். அவரது நினைவிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

எஸ்பிபி மரணத்திற்குப் பின் வரும் முதல் பிறந்த நாள் இன்று. 1944ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று அப்போதைய சென்னை மாகாணம் நெல்லூரில் பிறந்தார் எஸ்பிபி. தனது 74-வது வயதில் கடந்த ஆண்டு மறைந்தார். எஸ்பிபி. இல்லாத பிறந்த நாள் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், சமூக வலைதளம் எங்கும் அவரது 75-வது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர். எஸ்பிபியின் பண்புக்கு சில உதாரணங்களைக் காணலாம்.

அனைத்துச் சாதனைகளும் இருந்தாலும் செருக்கு இல்லா நிறைகுடமாய் நடந்துகொண்டவர் எஸ்பிபி. எந்த மேடை ஏறினாலும் முதலில் தனது குருநாதர் தனக்கு வாய்ப்பளித்தவர் என கோதண்டபாணி பற்றி நன்றியுடன் குறிப்பிடுவார். அடுத்து எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் எனக் குறிப்பிடுவார். என்ன பகை ஊடல் இருந்த நேரத்திலும், இளையராஜா எனும் மகா கலைஞன் என வாய்க்கு வாய் அவரைப் புகழாத மேடைகள் இல்லை.

பேட்டிகளிலும் தன் பெருமை வராது. யாராவது பேசினாலும் பேச்சை மாற்றி மற்றவர்களைப் பற்றிச் சொல்லி அவர்களைப் புகழ்ந்துவிடுவார். அவரிடம் சிறப்பாக உள்ள இன்னொரு விஷயம், மேடையில் தன்னுடன் பாடுபவர்களை அவர்கள் மிகப்பெரிய பாடகருடன் பாடுகிறோம் என்கிற தயக்கத்தை உடைக்க, அவர்களுடன் குறும்பு செய்து இயல்பான நிலைக்குக் கொண்டு வருவது.

எஸ்பிபியிடம் இருக்கும் மற்றொரு சிறப்பு 74 வயதிலும் அவர் 25 வயதில் பாடிய அதே குரல், பாவம் மாறாமல் இருந்ததுதான். மேடையில் அவர் பழைய பாடல்களைப் பாடும்போது அவர் பாடுகிறாரோ அல்லது பின்னாலிருந்து பாடலை ஒலிபரப்புகிறார்களோ என்று எண்ணத்தோன்றும். பல புகழ்பெற்ற பாடகர்கள் பின்னாளில் சரியாகப் பாட முடியாமல் தடுமாறியுள்ளனர். ஆனால் எஸ்பிபி 1965-ல் பாடிய இயற்கை எனும் இளையக் கன்னியானாலும் சரி, 70களில் பாடிய பொட்டு வைத்த முகமோ, பாடும்போது நான் தென்றல் காற்றானாலும் சரி அட்சரம் பிசகாமல் அதே குரலில் பாடி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.

ஒரு மனிதன் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும் மற்றவர்கள்பால் அவன் காட்டும் அன்பு, அவனது செருக்கில்லா பண்பான நடத்தை எப்போதும் போற்றப்படும். அவன் மறைந்தாலும் அந்தப் பண்பு போற்றப்படும். அதற்கு எஸ்பிபி மிகச் சிறந்த சான்று. அவர் யாரையும் விமர்சித்தோ, யாருடனும் பிணக்கு, சண்டை என்றோ இருந்ததில்லை. அவரது 55 ஆண்டுகளைக் கடந்த இசைப் பயணத்தில் எங்குமே இது தொடர்பாகக் கேள்விப்பட்டதில்லை.

1965 முதல் 4 தலைமுறைகளுக்கு எஸ்பிபி பாடியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த் என 80களின் நாயகர்களுக்கும், 90களில் ராமராஜன், பிரபு, சத்யராஜ், மோகன், அஜித், விஜய், அதன் பின்னர் தற்போது 2000, 2020கள் வரை ( ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்குப் பாடியது வரை) எஸ்பிபி நான்காவது தலைமுறைக்கும் பாடியுள்ளார். ‘அண்ணாத்த’ படத்தில் அவர் கடைசியாகப் பாடிய பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அவரை தென்னிந்திய ரசிகர்கள் தங்கள் மாநிலத்தில் பிறந்தவர் என்றே நினைக்கின்றனர். அது அவரது பலம். நாயகர்கள் அவர்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே வாழ்வார்கள். ஆனால், நாயகர்களின் குரலாக ஒலித்த எஸ்பிபி இதற்குப் பின்னரும் எங்கோ ஒரு நாயகனின் குரலாய் ஏதாவது ஒரு தளத்தில் பாடிக்கொண்டிருப்பார். “இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்”. என அவருக்காகவே எழுதப்பட்ட வரிகள் போல் பாடல்களால் அவரை நினைவுகூரலாம்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவர்கள் வாழ்க்கையில் எப்போதோ நடந்த சம்பவங்கள் அப்போது ஒலித்த பாடல் மூலம் மீண்டும் சுகமான, சோகமான நினைவுகளால் நினைவுகூரப்படும். அதை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்போதும் எஸ்பிபியின் பாடல் செய்துகொண்டே இருக்கும். அப்போது எஸ்பிபியையும் நினைவுகூரலாம்.