சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் 8-வது மாடியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் பிரேதப் பரிசோதனை முடிவை வெளியிட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மவுலி (48), கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி சுமிதாவை (41) மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். டவர் மூன்றாவது மாடி படுக்கை எண் 363-ல் உள்நோயாளியாக சுமிதா சிகிச்சை பெற்று வந்தார்.

மே 22ஆம் தேதி இரவு, மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்ற கணவர், மறுநாள் மருத்துவமனைக்கு காலை 10 மணி அளவில் வந்து பார்த்தபோது சிகிச்சை வார்டில் மனைவியைக் காணவில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

ஒருவாரம் ஆகியும் காணாமல்போன மனைவி குறித்து தகவல் கிடைக்காததால் மே 31 அன்று பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை 8-வது மாடியில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது தெரியவந்து பிணம் கைப்பற்றப்பட்டு சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டது. மவுலியின் புகாரை அடுத்து அவரை அழைத்துச் சென்ற போலீஸார் பெண் பிணத்தைக் காட்டியுள்ளனர்.

அந்தப் பிணம் சுமிதாவினுடையதுதான் என மவுலி அடையாளம் காட்டியுள்ளார். 3-வது மாடியிலிருந்து சுமிதா எப்படி 8 வது மாடிக்குச் சென்றார், அங்கு அவர் எப்படி மரணமடைந்தார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பப்பட்டது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.

ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட சுமிதாவால் எப்படி 8-வது மாடி வரை செல்ல முடிந்தது, 8-வது மாடியில் பெண் பிணம் கிடப்பது மருத்துவமனை நிர்வாகத்தால் எப்படிக் கண்டறிய முடியாமல் போனது, 23ஆம் தேதி காணாமல் போனவர் 31ஆம் தேதி வரை ஏன் தேடப்படவில்லை, எப்போது சுமிதா இறந்தார் என்கிற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் சுமிதாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வந்துள்ளன.

இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கை:

“மே 21ஆம் தேதி கணவர் மவுலியால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமிதா 23ஆம் தேதி காணாமல் போனார். இதனிடையில் ஜூன் 8ஆம் தேதி டவர் 3, 8 வது தளத்தில் காணாமல்போன சுமிதாவின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமிதாவின் சடலம் அவரது கணவரான மவுலி மூலம் உறுதி செய்யப்பட்டு பூக்கடை காவல் நிலையத்தில் ஐபிசி 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சுமிதாவின் உடல் ஜூன் 9ஆம் தேதி பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் அளித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுமிதாவின் மரணம் நோயின் தாக்கத்தால் உண்டானதாக அறிவித்ததை அடுத்து அவரது கணவரான மவுலியிடம் சுமிதாவின் உடல் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது”.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.