நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்சந்தையில் கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் காசிமேட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நாளைய தேவைக்காக மீன்களை வாங்க காசிமேட்டில் இன்று ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை மாத ஐயப்ப பக்தர்கள் விரதம் மற்றும் தைப்பூசம் என இந்து பண்டிகை நாட்கள் முடிந்ததால் மீன்களை வாங்குவதற்காக ஏராளமானோர் காசிமேட்டில் குவிந்துள்ளனர். இதனால் மீன்களின் விலையானது கணிசமாக உயர்ந்துள்ளது. காசிமேட்டில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதனை பின்பற்றாமல் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முண்டியடித்துக்கொண்டு மீன்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர். நோய் தொற்று பரவாத வண்ணம் அதிகாலை மீன்விற்பனை ஒரு இடத்திலும், காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வேறொரு இடத்திலும் மீன்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாமல் காசிமேட்டில் கூட்டம் குவிந்து வருகிறது.