டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 2 வாரங்களில் மட்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக 467 வழக்குகள் பதியப்பட்டு 624 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 516 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் மாநகரத்தில் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் 340 கிலோ, தேன்கனிகோட்டை காவல் நிலையத்தில் 300 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள் ளன.

புகையிலை, குட்கா பொருட்கள்கடத்தியதாக 4 ஆயிரத்து 333 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 443 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 20 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் குட்கா விநியோகம் செய்த முக்கிய நபர் சுகேல் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கடந்த 2 வாரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.28 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தகவல் தரலாம். மேலும், காவல் துறையின் சமூக வலைதளங்களான https://www.facebook.com/tnpoliceofficialட்விட்டர்: @tnpoliceoffl, வாட்ஸ் அப் எண் – 9498111191 ஆகியவை மூலமும் புகார் தெரிவிக்கலாம்.