கோவை: ‘‘கட்சி தலைவர்கள் அரசியல் பேசும்போது ஆட்சி தலைவர்களாக விளங்கும் ஆளுநர்களும் அரசியல் பேசலாம்’’ என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் டிஐஜி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. காவலர்களுக்கு அதிக பணிச் சுமை உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

காவலர்களுக்கு சங்கம் தொடங்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. காவலர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசியல் அழுத்தம் காவல்துறைக்கு அதிகம் உள்ளது. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது.

பிரசர் – பிளஷர்: ‘பிரசரை பிளஷராக’ கையாள வேண்டும். 2 மாநில பிரச்சினைகளை நான் அவ்வாறுதான் கையாண்டு வருகிறேன். கட்சி தலைவர் அரசியல் பேசுவதை போல் ஆட்சித் தலைவர்களாகிய ஆளுநர்களும் அரசியல் பேசலாம் என்பது எனது தீர்க்கமான கருத்து மற்றும் நிலைப்பாடு. போஸ்டர்களை ஒட்டி கண்டிக்கும் பதவி ஆளுநர்கள் பதவி இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை ஆளுநர்கள் குறித்து தெரிவித்துள்ள கருத்து குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.

கொழுப்பை குறைக்க..: மேற்கு வங்கத்தில் மீன்களை கடல் பூக்கள் என்று அழைக்கின்றனர். அங்கு நடைமுறையில் உள்ள ஒரு செய்தியை நான் பகிர்ந்தேன். மீன் உணவில் கொழுப்பை குறைக்கும் தன்மை அதிகம் உள்ளது. தமிழகத்தில் பலருக்கு அது தேவைப்படுகிறது. அதற்காகவே நான் கூறினேன். புதுச்சேரி முதல்வருக்கும் எனக்கும் இடையே உள்ளது அண்ணன், தங்கை உறவு.

அங்கு சிறப்பாக ஆட்சி நடக்கிறது. இதைக் கண்டு எதிர்க்கட்சி தலைவர் வைத்தியலிங்கம் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறாக விமர்சனங்களை பரப்பி வருகிறார். புதுச்சேரி, புதுமையாக செல்கிறது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.